பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தயாரிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிச்சைக்காரன்-2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பி அடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன்-2 என்ற படத்தை எடுத்துள்ளனர்.

எனவே, எங்கள் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் வழங்குமாறு படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவுக்கு பதில் மனுதாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவல் குறித்தும் எனக்கு தெரியாது. அந்த படத்தை பார்த்தது கூட இல்லை. வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்தேன். பிச்சைக்காரன்-2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. விஜய் ஆண்டனி சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி ஆய்வுக்கூடம் படத்தை காப்பி அடிப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிடலாம். அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டார்.

Related posts

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு..!!

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரம் : 14 தயாரிப்புகளின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது உத்தராகண்ட் அரசு!!

நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்!