உடல் நலம் பாதித்த தந்தையை காப்பாற்ற திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பழ மார்க்கெட்டில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் ஷட்டர் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பணம் மற்றும் செல்போன் திருடுபோனது. சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சிறுவன் ஒருவன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் மார்க்கெட் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 14 வயது சிறுவனை போலீசார் மடக்கி, பிடித்து விசாரித்தனர். அதில், திருவள்ளூர் அடுத்த செவ்வாய்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவன் என்பதும், கை, கால்கள் இயங்காத நிலையில், உடல் நலம் பாதித்த அப்பா மட்டும் இருப்பதும், அவரை காப்பாற்றுவதற்காக 9ம் வகுப்பு படித்தபோது, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை செய்வதற்கு முடிவெடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை கேட்டதும், சிறுவன் என்பதால் வேலை கொடுப்பதற்கு வியாபாரிகள் தயங்கியதும், வேலை ஏதும் கிடைக்காததால் அப்பாவை காப்பாற்ற கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கடைகளின் பூட்டை உடைத்து திருடியதும், வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அசந்து தூங்குவதை பயன்படுத்தி, அவர்களது செல்போன், பணத்தை திருடி வந்ததும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார், கெல்லீஸ் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அவனை அடைத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது

மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்