ஃபில் சால்ட் 89* ரன் விளாசினார்; லக்னோவை பந்தாடியது கொல்கத்தா

கொல்கத்தா, ஏப். 15: லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். குயின்டன் டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இணைந்து லக்னோ இன்னிங்சை தொடங்கினர். டி காக் 10 ரன் எடுத்து அரோரா பந்துவீச்சில் நரைன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ஸ்டார்க் வேகத்தில் ரமன்தீப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

லக்னோ 39 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த ராகுல் 39 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் பந்துவீச்சில் ரமன்தீப் வசம் பிடிபட, ஸ்டாய்னிஸ் 10 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் லக்னோ பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால், ஸ்கோர் வேகம் வெகுவாகக் குறைந்தது.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய நிகோலஸ் பூரன் 45 ரன் (32 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஸ்டார்க் வேகத்தில் விக்கெட் கீப்பர் சால்ட் வசம் பிடிபட்டார். அர்ஷத் கான் 5 ரன் எடுத்து கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. க்ருணால் பாண்டியா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் ஸ்டார்க் 3, அரோரா, நரைன், வருண், ரஸ்ஸல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நரைன் வீசிய 4 ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது (4-0-17-1).

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது. ஃபில் சால்ட், சுனில் நரைன் இணைந்து துரத்தலை தொடங்கினர். நரைன்6 ரன், ரகுவன்ஷி 7 ரன் எடுத்து மோஷின் கான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். எனினும், சால்ட் – கேப்டன் ஷ்ரேயாஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இவர்களைப் பிரிக்க லக்னோ பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. சால்ட் அதிரடியாக அரை சதம் அடித்து அசத்தினார்.

கொல்கத்தா அணி 15.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சால்ட் 89 ரன் (47 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்), ஷ்ரேயாஸ் 38 ரன்னுடன் (38 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் மோஷின் 2 விக்கெட் கைப்பற்றினார். ஃபில் சால்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related posts

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி

தென்சென்னை தொகுதிக்கு நிகராக வடசென்னையை மாற்றுவேன்: அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ உறுதி