மனுதாக்கலில் ஓவரா ஒலித்த குக்கர் விசில் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க சத்தமில்லாம போன கதையை சொல்கிறார் : wiki யானந்தா

‘‘பில்டிங் ஸ்டிராங்… பேஸ்மென்ட் வீக்’’ன்னு சொல்ற வடிவேலு காமெடி தான் மலர் கட்சியோட நிலையான்னு மற்ற கட்சிக்காரங்க கமெண்ட் அடிக்கிறாங்களாமே…’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டுல மலர் பார்ட்டியோட வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், 2வது பெரிய கட்சியாக நாங்கதான் இருக்கிறோமுன்னும் கூறிட்டு வர்றாங்க.. மாநிலம், மாவட்டம், வட்டம் வாரியாக புதுசு, புதுசா ஆட்களை போட்டு மலர் கட்சியில நிர்வாகிங்க அதிகமாக இருக்குறமாதிரி காட்டுறாங்க.. ஆனா நடந்து முடிஞ்ச நாடாளும் மன்றத்தோட தேர்தல்ல முக்கிய பணியான பூத் ஏஜென்ட்கள் பணியில ஆளே இல்லையாம்.. பார்ட்டியோட அடித்தளமே அதுதான், தேர்தல் நேரத்துல மலர் பார்ட்டியோட அடித்தளமான பூத் ஏஜென்ட்களை காணவே இல்லையாம்.. இதுல, குறிப்பா வெயிலூர் தொகுதியில இருக்குற வாக்குச்சாவடிகள்ல மலர் பார்ட்டிகளோட பூத் ஏஜென்ட்கள் யாருமே இல்லையாம்.. இதை பார்த்த மத்த கட்சிக்காரங்க, என்னப்பா, ரெண்டாவது பெரிய கட்சி நாங்கதான்னு சொல்றாங்க.. ஒத்த ஆளைக்கூட பூத்ல காணோமே, வடிவேலு கதையா, பில்டிங் ஸ்டிராங்க்.. பேஸ்மென்ட் வீக்கா’’ன்னு கட்சிக்காரங்க கமெண்ட் அடிச்சிக்கிட்டு போனாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தகவல் திரட்டுவதில் தடுமாறினாலும் தேர்தல் நேரத்தில வேட்டி சேலை பறிமுதல் விவகாரத்தை வெளியே தெரியாம ஆய்வாளர் ஒருத்தர் அமுக்கிட்டாராமே..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும்னு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வர்றாங்க.. தண்ணீர் திறக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம்னு ஏற்கனவே அறிவிச்சாங்க.. இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மஞ்சள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணி துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டாங்க… இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது. நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்குள் நுழைந்த இவர்கள், வெளியே வர மறுத்து விட்டாங்க.. இது, போலீசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இவர்களது போராட்டத்தை முன்கூட்டியே மோப்பம் பிடிக்க உளவுத்துறை போலீசார் தவறி விட்டாங்க.. மஞ்சள் மாவட்ட ஸ்பெஷல் பிராஞ்ச் (தனிப்பிரிவு) போலீசுக்கும், எஸ்பிசிஐடி போலீசுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லையாம்.. அதனால்தான், இந்த தடுமாற்றம் என்கிறார்கள், காவல்துறை உயரதிகாரிங்க.. குறிப்பாக, ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் தகவல் திரட்டுவதில் தடுமாறுகிறாராம்.. நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக வேட்பாளருக்கு நெருங்கிய நபரின் குடோனில் இருந்து வேட்டி-சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தகவல் வெளியே தெரியாமல் அமுக்கியதும் இந்த ஆய்வாளர்தானாம்.. எதற்காக அமுக்கினார் என்ற விசாரணை தொடருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஹனிபீ தொகுதியில் குக்கருக்கு குழி பறித்த பலாப்பழ ஆதரவாளர்கள் கதைதான் இப்போ ஹாட் டாபிக்கா ஓடுகிறதாமே..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நடந்து முடிந்த எம்பி தேர்தலில் குக்கர்காரரும், பலாப்பழக்காரரும் தாமரையுடன் கூட்டணி சேர்ந்தாங்க.. இதில் ஹனீபி தொகுதியில் குக்கர்காரர் போட்டியிட்டதால வேறு வழியில்லாம, கடலோர தொகுதியில் பலாப்பழக்காரர் சுயேச்சையாக போட்டியிட்டாரு.. இருவரும் இணைந்து பயணிப்பதாக கூறினாலும், தர்மயுத்தம் பண்ணினதாலதான் கட்சியும், ஆட்சியும் தங்களை விட்டு போயிருச்சுங்கற கோபம் இன்னமும் குக்கர்காரருக்கு, பலாப்பழக்காரர் மேல இருந்துக்கிட்டுதான் இருக்காம்… இத வெளிப்படுத்துற மாதிரி, ஹனிபீ தொகுதியில் போட்டியிட்ட குக்கர் தலைவரும், பிரசாரத்திற்கு போன இடத்தில் எல்லாம், கடந்த 14 வருடமாக இந்த தொகுதி மக்களிடம் இருந்து என்னை சிலர் சதி செஞ்சு பிரிச்சுட்டாங்க.. என்னை துரோகின்னு சொல்லிக் கொடுத்ததை நம்பி, அப்போதைய பெண் தலைமையானவரும் என்னை ஹனீபீ தொகுதிக்கு போக வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க.. இதனாலதான் தொகுதிக்கு வரமுடியாம போயிருச்சுன்னு மறைமுகமாக பலாப்பழக்காரரை பிரசாரத்தின்போது வாரிவிட்டாராம்.. இதனால் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் தொகுதியில் நடந்த தேர்தல் பணிகளில் ரொம்ப அடக்கியே வாசிச்சாங்க.. தேர்தல் பணிகளில் தேடிப் பார்த்தால் கூட தெரியாத தூரத்தில் ஒதுங்கிட்டாங்க.. வேட்பு மனுதாக்கல் நேரத்தில் கூட்டணி மகிழ்ச்சியில் குக்கர் விசில் சத்தம் ஓவரா கேட்ட நிலையில், வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க சத்தமே இல்லாம போச்சு… மேலும், பலாப்பழக்காரர் தொகுதியில் பிரசாரம் செய்யாததும், அவரது மகன்களும் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியதால், கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம் குக்கர்காரர்.. இந்த பல்சை அறிந்துதான் தாமரைக்கட்சியின் மாநில தலைமையானவர், இலைக்கட்சி தொண்டர்கள் குக்கர்காரர் தலைமையில் ஒன்றிணைவார்கள் என இங்கேயும், பலாப்பழக்காரர் தலைமையில் ஒன்றிணைவார்கள் என குழப்பும் விதத்தில் அங்கேயும் மாறி, மாறி பேசியதாகவும் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் செலவுக்காக ‘விட்டமின் ப’ வராததால் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராமே இலைக் கட்சி வேட்பாளர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சின்ன வெங்காயம் தொகுதியில் இலைக்கட்சி சார்பில் வேட்பாளராக பிரபல நடிகரின் பெயரை கொண்டவர் போட்டியிட்டார். முக்கிய நிர்வாகிகள் யாரும் வேட்பாளரை கண்டு கொள்ளாததால் பிரசாரம் ஆரம்பம் முதல் இறுதிக்கட்டம் வரையிலும் சுறுசுறுப்பாக இல்லாமல் தான் வேட்பாளர் இருந்து வந்தாராம்… தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு பெயரளவுக்கு மட்டும்தான் சென்று வந்துள்ளாராம்.. சொந்த கட்சிக்குள்ளே தன்னை யாரும் மதிக்கவில்லை… கூட்டணி கட்சிக்காரங்களும் தன்னை மதிக்க வில்லை….தேர்தல் செலவுக்கு பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தேர்தல் களத்தில் தன்னை இறக்கி விட்டு விட்டு பின்னர் தலைமையும் கண்டுகொள்ளவில்லைனு நெருங்கிய ஆதரவாளர்களிடம் அவர் புலம்பினாராம்… ஆனால் இதுபற்றி வெளியே எதுவும் காட்டிக் கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த தகவல் தெரிய வந்த தலைமையிடத்தில் இருந்து தேர்தல் செலவுக்காக சீக்கெரட்டாக ‘விட்டமின் ப’ அனுப்பி வைக்கப்பட்டதாக வேட்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.. ஆனால் தலைமயிடத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ‘விட்டமின் ப’ கடைசி வரைக்கும் வேட்பாளர் கைக்கு வந்து சேரவில்லை. இதனால் தலைமை மீது வேட்பாளர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம்’’… என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 குழந்தைகள் காயம்..!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!