உரிய அனுமதியின்றி நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்காக ஆந்திராவின் நீர்வளத்துறைக்கு ரூ.100 கோடி அபராதம்!!

ஹைதராபாத் : சுற்றுசூழல் பாதிப்பின்மைக்கான தடையில்லா சான்று பெறாமல் நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை மேற்கொண்ட ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சித்தூர் மாவட்டத்தில் அவுலபள்ளி, முடிவடு மற்றும் நெதிகுண்டபள்ளி ஆகிய கிராமங்களில் நீர்த்தேக்கம் அமைக்க முடிவு எடுத்த ஆந்திர அரசு, அதற்கான பணிகளை மேற்கொண்டது. இதற்கு சுற்றுசூழல் அனுமதி பெறவில்லை என்றும் இந்த பணி தொடர்ந்தால் பல கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், சத்திய கோபால் ஆகியோர் அமர்வு விசாரித்தது. நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், கட்டுமான பணிகளால் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளனர். சுற்றுசூழல் விதிகளை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் ஆந்திர மாநில அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.100 கோடி அபராதமும் விதித்தனர். இந்த தொகையை 3 மாதங்களுக்குள் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். சுற்றுசூழல் விதிமீறல் விவகாரத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து இருப்பது ஆந்திர அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து 73,896 புள்ளிகளில் நிறைவு..!!