ஆவணம் தொலைந்ததாக கூறி அலைக்கழிப்பு வங்கியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திருப்போரூர்: நெல்லிக்குப்பத்தில், கடன் பெற்று, கடனை அடைத்த ஆவணம் தொலைந்ததாக கூறி அலைக்கழிப்பதால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டனர். திருப்போரூரை அடுத்துள்ள நெல்லிக்குப்பம் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கீழூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலாம்பிகை என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, 25000 ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை மாத தவணையில் செலுத்தி முழுவதுமாக அடைத்து விட்டார். இந்நிலையில், கடனை அடைத்து விட்டதால் கடன் நிலுவை இல்லா சான்றிதழினையும், அசல் ஆவணத்தையும் திரும்பக்கேட்டு வங்கியை அணுகி இருக்கிறார்.

ஆனால், அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக கூறி, வங்கி நிர்வாகம் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், வங்கி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு வங்கி முன்பு நேற்று சங்க நிர்வாகிகள் லிங்கம், செல்வம் ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர்.

இதையடுத்து, வங்கி நிர்வாகம் தரப்பில் பாதிக்கப்பட்டோரையும், போராட்டக் குழுவினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் வங்கித்தரப்பில் ஆவணம் தொலைந்து விட்டது எனவும், வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை எதுவும் நிலுவை இல்லை என சான்றிதழ் தருவது என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.

Related posts

சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ

இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா

சில்லி பாயின்ட்…