பயணிகள் வருகை குறைவு, போதிய வருவாய் இல்லை: வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் மூடல்

கரூர்: பயணிகள் வரத்து குறைவு, போதிய வருவாய் இல்லாததால் 10 ஆண்டுகளாக இயங்கி வந்த வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் மூடப்பட்டது. கரூர்- சேலம் அகல ரயில் பாதை திட்டம் 2013ல் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள கரூர் மாவட்டம் வாங்கலில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு 2013ம் ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு கரூர்- சேலம், சேலம்- மயிலாடுதுறை- சேலம் ஆகிய முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் நின்று செல்லும். ஆனால் பயணிகளின் பயன்பாடு பெரிய அளவில் இல்லை. பயணிகள் வருகை மற்றும் வருவாய் குறைவாக இருந்த ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி வாங்கல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தும் யாரும் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை. இதனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் வருவதாலும், போதிய வருவாய் இல்லாததாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்த வாங்கல் ரயில் நிலையத்தை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி வாங்கல் ரயில் நிலையம் ஜனவரி 25(இன்று) முதல் மூடப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் வாங்கல் ரயில் நிலையம் மூடப்பட்டது. இதனால் இனி வாங்கல் ரயில் நிலையத்தில் சேலம்- கரூர் ரயில் நின்று செல்லாது. அதேபோல் பயணிகளுக்கான எந்த சேவையும் அங்கிருக்காது. சேலம் -கரூர் ரயில் மோகனூருக்கு அடுத்து கரூரில் தான் நிற்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து கரூர் ரயில் நிலைய வணிக அதிகாரிகள் கூறும்போது, வாங்கல் நிலையத்திற்கு தினம்தோறும் குறைந்த பயணிகளே வந்து சென்றனர். இதனால் வருவாய் இல்லை. மேலும் பயணச்சீட்டு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை யாரும் எடுக்கவில்லை. இதனால் அங்கு பணியில் இருந்த ரயில்வே பணியாளர்கள் 2 பேர் திருப்பி அழைக்கப்பட்டு விட்டனர். கேங்மேன் மட்டுமே பணியில் உள்ளார். 2 ரயில்கள் மட்டுமே நின்று செல்லும் நிலையில் ஓரிரு பயணிகளுக்காக பயணச்சீட்டு விற்பனையாளரை பணி அமர்த்துவது சாத்தியமில்லாதது. இதனால் வாங்கல் ரயில் நிலையம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது என்றனர்.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்