பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி ஓடும் ரயிலில் தீ வைத்தது தீவிரவாத செயல்தான்: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி இரவு 9.30 மணியளவில் கோழிக்கோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது டி1 பெட்டியில் இருந்த ஒரு வாலிபர் திடீரென பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பயணிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதில் பயணிகளுக்கு தீ வைத்தது டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் என தெரியவந்தது. போலீசின் தீவிர விசாரணையில் ஏப்ரல் 6ம் தேதி மும்பையில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் என்ஐஏ நேற்று கோழிக்கோடு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதில் கூறியிருப்பது: கோழிக்கோட்டில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் ஒரு தீவிரவாத செயலாகும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக் செய்பி தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். தீவிரவாத எண்ணங்களுடன் செயல்படுபவர்கள் இடம்பெற்றுள்ள பல சமூக வலைதள குழுக்களில் இவர் உறுப்பினராக உள்ளார். இதன் மூலம் இவருக்கும் தீவிரவாத செயலில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டது. தன்னை யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காகத்தான் இவர் கேரளாவில் இந்த தீவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு

‘அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்’: பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்

வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் கலைஞர் வீடு கட்ட பயனாளிகள் தேர்வு