பஞ்சுமிட்டாயில் நஞ்சு கலப்பு…

நன்றி குங்குமம் டாக்டர்

ரோடமைன் பி எனும் எமன்!

குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றான இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் ‘‘ரோடமைன் பி” எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளதே இதற்கு காரணம். பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள இந்த ரோடமைன் பி என்பது என்ன? அது வேறு எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது? இதனை உட்கொள்வதால் என்ன பாதிப்பு போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் உணவியல் துறை நிபுணர் ப. வண்டார்குழலி.

சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு வேதிப்பொருள்தான் இந்த ரோடமைன் பி. இது செயற்கைச் சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த வேதியியல் நிறமி, மக்கும் தன்மையற்றது. வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக்கூடியது. தண்ணீரில் கரையக்கூடிய தன்மை அதிகம் கொண்டதாலும், குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது என்பதாலும், ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) வகுத்துள்ளது. அதன்படி, உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படும் நிறமிகள் உள்ளன. உதாரணமாக சிவப்பு நிறத்துக்கு அலூரா ரெட், பச்சை நிறத்துக்கு ஆப்பிள் கிரீன் போன்றவைகளாகும். அவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவுப் பொருளில் இருக்க வேண்டும். ஆனால், ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப்பொருட்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த செயற்கை நிறமிக்கு ரோடமைன் 610, ரோடமைன் 0, பேஸிக் வொய்லட் 10, சி.1., பிக்மென்ட் வொய்லட்1, பிரில்யண்ட் பிங்க் பி.சி.1. 45170, டேட்ராதையல் ரோடமைன் ( Tetraethylrhodamine) என்று வேறு பெயர்களும் உண்டு.இந்த நிறம் பஞ்சுமிட்டாயில் மட்டும் இல்லை, அந்த நிறத்தில் உள்ள அனைத்து இனிப்பு, மிட்டாய், ஜெல்லி, சிக்கி போன்ற பல உணவுப் பொருள்களிலும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, மில்க் பேடா என்ற இனிப்பு வகையின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது. மேலும், சிவப்பு முள்ளங்கி மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மேற்பரப்பில் சிவப்புநிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கு ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, மிளகாய்ப் பொடி, கேழ்வரகு, தக்காளி சாஸ் வகைகளிலும் சிவப்புநிறம் பெறுவதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரோடமைன் பி தடை என்பது சமீபத்தி்ல் விதிக்கப்பட்ட தடை அல்ல. இது Food and Drug ordibance 1952 ன்படி 50 வருடங்களுக்கு முன்னரே தடைசெய்யப்பட்டுவிட்டது. காரணம், 1961-இல் இந்த நிறத்தைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட pharmacokinetics ஆராய்ச்சிகளில், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் நிறத்தின் படிமானம் தேங்குவது கண்டறியப்பட்டது. அதன்பிறகு மீண்டும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்து சர்ச்சை எழுந்து 1973-இல் தடை செய்யப்பட்டது.

பின்னர், புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சி மையமான Indian Institute of Toxicological Research ஆல் ரோடமைன் பியுடன் சேர்த்து Mentanil yellow, orange II போன்றவையும் தடை செய்யப்பட்டன.இது புற்றுநோய்க்கான காரணிகளில் (குரூப்3) ஒன்றாக இருப்பதால், உணவில் சேர்க்கக் கூடாது என்று 1978 இல் International Agency for Research on Cancer ( IARC) எச்சரிக்கை கொடுத்தது.

செயற்கை நிறம் தோற்றம்

முதல் செயற்கை உணவு நிறமானது 1856 இல் Henry Perkin என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்த செயற்கை நிறமிகள், நிலக்கரி தாரில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. செயற்கை உணவு நிறங்கள் அவற்றின் வேதியியல் வடிவமைப்பு மற்றும் நீரில் கரையும் தன்மையைப் பொருத்து மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன.

1. நீரில் கரையும் செயற்கை உணவு நிறங்கள்

2. கொழுப்பு அல்லது எண்ணெயில் கரையும் செயற்கை உணவு நிறங்கள்

3. லேக் நிறமிகள்

அந்த வகையில், ரோடமைன் பி தண்ணீரிலும் எண்ணெயிலும் எளிதில் கரையக்கூடியதாகும்.

ரோடமைன் பி உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்

ரோடமைன் பி புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாசப் பாதிப்புகள், முதுகு தண்டுவட பாதிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செல் சிதைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே மனித உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது என்பதால், ரோடமைன் பி உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு பொருளை ஒரு முறை உட்கொள்வதாலேயே தீவிர பாதிப்புகள் உடனே ஏற்படாது. எந்த பொருளாக இருந்தாலும் அதை தொடர்ந்து உட்கொள்ளும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படும். ஆனால், சில நேரங்களில் எவ்வளவு ரோடமைன் பி கலக்கப்படுகிறது என்பதைப் பொருத்து ஒரு முறை உட்கொண்டாலே உடலில் தீவிர நச்சுத்தன்மை ஏற்படக்கூடும். அது ஒவ்வொருவரின் உடல் எதிர்ப்புச் சக்தியைப் பொருத்தும் அமைகிறது.

அந்த வகையில், பஞ்சுமிட்டாய் இங்கே பிரச்சினை இல்லை. அதில் சேர்க்கப்படும் நிறம் ரோடமைன் பி தான் பிரச்சினை. பொதுவாக, செயற்கையாக சேர்க்கப்படும் உணவு நிறங்கள் இயற்கைப் பொருட்களில் இருந்து எடுக்கப்படாமல், முழுவதும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இயற்கைப் பொருட்களிலிருந்து உணவு நிறங்கள் பிரித்தெடுக்கப்படும்போது நிகழும் பல கட்ட செயல்முறைகள் எதுவும் இந்த செயற்கை நிறங்களின் தயாரிப்பில் இருப்பதில்லை.

எளிமையாகவும் விரைவாகவும் அதிக அளவிலும் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பண்புகளே, இயற்கை நிறங்களைப் பயன்படுத்துவதை சிறிது சிறிதாகத் தவிர்த்து, முழுவதும் செயற்கை உணவு நிறங்களுக்கு உணவு நிறுவனங்கள் மாறிவிட்டதற்கான முக்கிய காரணமாகும். செயற்கை உணவு நிறங்கள் யாவும் பொடியாகவோ, பசையாகவோ, களிம்பாகவோ, நீரில் கரையக் கூடியவையாகவும் இருப்பது, பல வகைகளில் சேர்மானத்துக்கான எளிய வழியாக இருக்கின்றது. எனவே, இந்த நிறங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், உணவுப் பயன்பாட்டுக்காக அந்த நிறத்தை வாங்குவதையும் விற்பதையும் முழுமையாகத் தடை செய்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்தமுடியும்.

இதனால், மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், கேக் என எதுவாக இருந்தாலும் உங்கள் கண்களை கவரும் வண்ணத்தில் பளிச்சென்று உணவுப் பொருட்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பது ஒன்றே நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழியாகும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

Related posts

சிறுநீரகம் காப்போம்… சிறப்பாய் வாழ்வோம்!

குதிகால் வலி

ஹெப்படைட்டிஸ் அலெர்ட் ப்ளீஸ்!