கடல் சீற்றத்தால் திசைமாறும் நீரோட்டம்; பாம்பன் புதிய ரயில் பாலப்பணிகள் ‘டல்’: தூக்குப்பாலத்தை நகர்த்துவதில் சிக்கல்

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மணல் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2.5 கிமீ தொலைவுக்கு கடலில் 100 தூண்கள் அமைக்கப்பட்டு புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டபம் பகுதியில் இருந்து தூக்குப்பால பகுதி வரை 77 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்சார ரயில் இயக்குவதற்கான மின் கம்பங்களும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் ஏறத்தாழ 90 சதவீதம் முடிந்து விட்டன. அதுபோல பாம்பன் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரை 23 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக கப்பல் கடந்து செல்லும் அளவிற்கு மேல் நோக்கி செல்லும் அளவில் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் பாம்பன் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்து தூக்குப்பாலத்தை நகர்த்தி நடுப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 700 டன் எடையளவு கொண்ட இந்த தூக்குப்பாலத்தை நகர்த்திச் செல்வதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதால் பணியாளர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தூக்குப்பாலத்தை நகர்த்தி செல்லும்போது கடலில் மிதவை மேடை அமைத்து, அதில் இயந்திரங்களை பொருத்தி தூக்குப்பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி வருகின்றனர்.

தற்போது கடல் சீற்றமாக உள்ளதால், கடலின் நீரோட்டம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக மாறுகிறது. ஒரு நாளைக்கு வடக்கு பக்கம் நீரோட்டம் செல்கிறது. மற்றொரு நாள் தெற்கு பக்கம் நீரோட்டம் செல்கிறது. இதனால் பணியாளர்கள் இரும்பு மிதவையில் இருந்து இயந்திரத்தை வைத்து தூக்கு பாலத்தை நகர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் பணிகளை தீவிரப்படுத்த முடியாமல் தொய்வு ஏற்பட்டு வருகிறது. கடல் நீரோட்டம் சரியானதும் பணிகள் தொய்வின்றி தொடருமென பணியாளர்கள் தெரிவித்தனர்.

2025ல்தான் ரயில் போக்குவரத்து?
பாம்பன் புதிய ரயில்வே பணிகள் முழுமையாக நிறைவடைந்து 2024 பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மார்ச், தொடர்ந்து ஜூன் என தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இப்போது திட்டமிட்டபடி பணிகள் நிறைவுடையுமா என்ற குழப்பமும் நிலவுகிறது. பாம்பன் கடலோரப் பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும். புயலும் ஏற்படும்.

இதனால் இந்த 3 மாதங்களில் மீனவர்களே சில நாட்களில் மீன் பிடிக்க செல்வதற்கு மிகவும் சிரமப்படுவர். மேலும், இந்த 3 மாதங்களில் ரயில் பாலம் அமைக்கும் பணிகளைத் தொடர்வது மிகவும் கடினமாகும். அதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பாலப்பணிகளை முடிக்க வேண்டும். இல்லையெனில் 2025ம் ஆண்டு தான் பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்துகொண்ட அரசு ஊழியர் கைது..!!

பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி..!!

வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும்: பிரதீப் ஜான்