பல்லாவரம் மேம்பாலத்தில் வேன் மோதி கல்லூரி மாணவன் பலி: நண்பர் படுகாயம்

பல்லாவரம்: பல்லாவரம் மேம்பாலத்தில் நேற்று எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மினி சரக்கு வேன், பைக்மீது மோதியதில் ஒரு கல்லூரி மாணவன் பரிதாபமாக பலியானார். பைக்கில் அவருடன் வந்த சக கல்லூரி நண்பர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வேன் டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆகாஷ் (20), நண்பர் கவுசிக் (20). இவர்கள் இருவரும் தாம்பரம் அருகே சேலையூரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல், நேற்று காலை வழக்கம் போல் இருவரும் பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை கவுசிக் ஓட்ட, பின்னால் ஆகாஷ் அமர்ந்து வந்துள்ளார்.

இவர்களின் பைக் மீனம்பாக்கம் தாண்டி பல்லாவரம் மேம்பாலத்தில் சென்றபோது, அங்கு போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் எதிர் திசையில் பைக்கை கவுசிக் ஓட்டி சென்றுள்ளார். அப்போது தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி வந்த ஒரு மினி சரக்கு வேன், எதிர்திசையில் கவுசிக் ஓட்டி வந்த பைக்மீது வேகமாக மோதியது. இதில் கல்லூரி மாணவர்களான கவுசிக், ஆகாஷ் ஆகிய இருவரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். இதில், பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே படுகாயங்களுடன் பரிதாபமாக பலியானார்.

மேலும், பைக்கை ஓட்டிவந்த கவுசிக்குக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கவுசிக்கை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, விபத்தில் பலியான கல்லூரி மாணவன் ஆகாஷின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கோவிலம்பாக்கத்தை சேர்ந்த மினி சரக்கு வேன் டிரைவர் வினோத் (25) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர். பல்லாவரம் மேம்பாலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர் எனக் குறிப்பிடத்தக்கது. இங்கு சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, மேம்பாலத்தின் நடுவே இரும்பு பேரிகார்டுகளை அமைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Related posts

முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பாஜவுடன் கூட்டு; சந்திரபாபு நாயுடுவுக்கு வெட்கமில்லை.! ஜெகன்மோகன் தாக்கு

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது