பல்லாவரத்தில் அடுத்தடுத்து 3 கார்கள் தீவைத்து எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

பல்லாவரம்: பல்லாவரத்தில் அடுத்தடுத்து 3 கார்களை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரத்தில் வாரச்சந்தை நடைபெறும் சாலையில், தினமும் ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இதன் அருகிலேயே சென்னை பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளதால், அங்கு வரும் பயணிகளை ஏற்றி, இறக்க வருகை தரும் வாகன ஓட்டிகள் காத்திருக்கவும், ஓய்வு எடுப்பதற்காகவும் இந்த இடத்தின் அருகிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி சற்று நேரம் நின்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் மற்றும் டிரை சைக்கிள்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து, கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதனை கண்டதும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 3 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியெங்கும் புகை மூட்டமாக காணப்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related posts

தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான பெண் ஊழியர் கைது!

உடல் நலம் தேறி வரும் பெண் யானை!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு அழைப்பு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்