உம்மன் சாண்டியை கொல்ல முயற்சித்தவரின் தாய் சாண்டி உம்மனுக்கு தேர்தலில் போட்டியிட டெபாசிட் கட்டினார்

திருவனந்தபுரம்: உம்மன் சாண்டி முதல்வராக இருந்த போது அவரைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் தாய், சாண்டி உம்மனுக்கு தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகை ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது கடந்த 2013ம் ஆண்டு கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கல் வீசினர். இதில் உம்மன் சாண்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நசீர் என்பவர் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நசீருக்கு 2 ஆண்டுகளும், மற்ற இருவருக்கு 3 ஆண்டுகளும் தண்டனை விதித்தது. இதற்கிடையே தன்னைத் தாக்கியவர்களை மன்னிப்பதாக உம்மன் சாண்டி கூறினார். இந்நிலையில் உம்மன் சாண்டியை தாக்கிய நசீர் கடந்த சில வருடங்களுக்கு முன் அவரை நேரில் சந்தித்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். உம்மன் சாண்டியின் மறைவைத் தொடர்ந்து அவரது புதுப்பள்ளி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். சாண்டி உம்மனுக்கு டெபாசிட் பணம் கட்டுவதற்கு ரூ.15 ஆயிரம் பணத்தை நான் தான் கொடுப்பேன் என்று நசீரின் தாய் ஆமினா பீவி கூறினார். இதன்படி இவர் சாண்டி உம்மனுக்கு ரூ.15 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தார். அந்தப் பணத்தைத் தான் சாண்டி உம்மன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கட்டினார்.

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்