குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் சோதனை: தரமற்ற 50 கேன்கள் பறிமுதல்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் தனியார் குடிநீர் கேன்கள் தரமற்ற நிலையில் இருப்பதாக தமிழ்நாடு உணவுபொருள் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், இன்று காலை திருவொற்றியூர் பகுதிகளில் இயங்கி வரும் 10க்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உணவுபொருள் பாதுகாப்பு ஆணையர் லால்வீனா தலைமையில், மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ்சந்திர போஸ், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி சுகாதார அலுவலர் கார்த்திக், துப்புரவு அலுவலர் அன்பழகன் ஆகியோர் கொண்ட 10 பேர் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில் திருவொற்றியூர், எர்ணாவூர் பஜனை கோயில் தெரு, கத்திவாக்கம் நேதாஜி நகர், சத்தியமூர்த்தி நகர், அஜாக்ஸ், தேரடி பகுதிகளில் உள்ள 16 தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கேன்களில் உள்ள குடிநீர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கேன்களில் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதும், கேன்களில் அடைக்கப்படும் குடிநீர் தரமற்ற நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தரமற்ற நிலையில் இருந்த 50க்கும் மேற்பட்ட கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான உரிமம், கட்டமைப்பு வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இன்று மாலை வரை நடைபெறும் சோதனையில், தரமற்ற குடிநீர் கேன்களை சப்ளை செய்து வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை

சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட்டது புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூர் மணி மண்டபம்

நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்ற அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!