ஒடிசா ரயில் விபத்து உண்மை வெளிவராமல் ஒன்றிய அரசு தடுக்கிறது: மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மை காரணம் வெளியே வரவிடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது என்று மம்தா குற்றம் சாட்டினார்.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த, காயமடைந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பயணிகளின் உறவினர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக மேற்கு வங்க அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடந்தது.

இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொண்டு நிவாரண நிதி மற்றும் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் அவர் பேசும் போது,’ ஒடிசா ரயில் விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 86 பேரை இதுவரை அடையாளம் காண முடிந்துள்ளது. 172 பேர் பலத்த காயங்களுடனும், 635 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளது. பாலசோர் விபத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இதை பேச விடாமல் தடுக்க மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 16 நகராட்சிகளில் சோதனை செய்ய சிபிஐயை அனுப்பியுள்ளது. இந்த சோதனைகள் மூலம் உண்மையை உங்களால் (பாஜ அரசு) மறைக்க முடியாது. உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விபத்தில் காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் விபத்துக்கான காரணத்தை அறிய விரும்புகிறார்கள். அதன் பின்னணியில் உள்ள குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்

மருந்து கம்பெனியில் பயங்கர தீ; 50 தொழிலாளர்களை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு