யாருடைய குடியுரிமையும் பறிபோகாது மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும்: அமித்ஷா திட்டவட்டம்

புதுடெல்லி: ‘மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டு வரப்படவில்லை’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். ஈடி நவ் சேனலின் உலகளாவிய பொருளாதார மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: 1947ல் நாடு பிரிவதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்பதால், இந்திய ஒற்றுமை நடைபயணம் நடத்த நேரு-காந்தி வாரிசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை. 2014ல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. எல்லா துறையிலும் மோசடிகள் இருந்தன. வெளிநாட்டு முதலீடு வரவில்லை. இப்போது 10 ஆண்டு ஆட்சியில் பாஜ அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளது. அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது, ஊழல் எதுவும் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம். அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என 500-550 ஆண்டுகளாக மக்கள் காத்திருந்தனர்.

ஆனால், சமாதான அரசியலாலும், சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டியும் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) குறித்து முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தூண்டப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே சிஏஏ உள்ளது. இது யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல. சிஏஏ சட்டம் கொண்டு வர நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆட்சியிலேயே கையெழுத்திடப்பட்டது. ஆனால் சமாதான அரசியல் காரணமாக காங்கிரஸ் அதை புறக்கணித்தது. 2019ல் இயற்றப்பட்ட இந்த சட்டம் தொடர்பான விதிகள் வெளியிடப்பட்ட பிறகு வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படுவது நிச்சயம். உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட அமலாக்கம் சிறந்த சமூக மாற்றம். மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சிவில் குறியீடுகள் இருக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

 

Related posts

மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்

பங்குச்சந்தை வர்த்தகம் எனக்கூறி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.9 கோடி மோசடி: மக்களே உஷாரா இருங்க

பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்