பாஜவுடன் கூட்டணி இல்லை மஜத தனித்து போட்டி: கேரள அமைச்சர் கிருஷ்ணன்குட்டி அதிரடி

பெங்களூரு: மக்களவை தேர்தலில் பாஜ – மஜத கூட்டணி அமைத்துள்ள நிலையில், கேரளாவில் பாஜவுடன் கூட்டணி அமைக்காமல் மஜத தனித்தே போட்டியிடும் என்று அம்மாநில மஜத அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பாஜ – மஜத கூட்டணி அமைத்துள்ளது. பாஜவுடனான கூட்டணிக்கு கர்நாடக மஜத தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மஜதவில் இருக்கும் சிறுபான்மை தலைவர்கள் பாஜவுடனான கூட்டணியை விரும்பவில்லை.

இதனால் மஜத மாநில தலைவர் பதவியிலிருந்து சி.எம்.இப்ராஹிமை நீக்கிய அக்கட்சியின் தேசிய தலைவர் எச்.டி.தேவகவுடா, புதிய மாநில தலைவராக தனது மகனும் முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமியை நியமித்தார். இந்நிலையில், கேரளாவில் பாஜவுடனான கூட்டணி இல்லாமல் மஜத தனித்தே போட்டியிடும் என்று கேரள மஜத அமைச்சர் கிருஷ்ணன்குட்டி கூறியுள்ளார். கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி மற்றும் கேரள மாநில மஜத தலைவர் மேத்யூ டி. தாமஸ் ஆகிய இருவரும் பெங்களூருவில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடாவை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசித்ததுடன், தங்களது நிலைப்பாட்டையும் தெரிவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணன்குட்டி, நானும் கேரள மஜத தலைவர் மேத்யூ டி.தாமஸும் கட்சி தலைமையிடம் பாஜவுடனான கூட்டணி ஏற்கத்தக்கதல்ல என்ற எங்களது கருத்தை திடமாக தெரிவித்தோம். கேரளாவில் மஜத தனித்தே போட்டியிடும். அனைவரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக கிருஷ்ணன்குட்டி தெரிவித்தார். கேரளாவில் மஜத இடதுசாரி கூட்டணியில் இருப்பதால், கிருஷ்ணன்குட்டியை கேரள அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்