என்எம்சி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு; நாடு முழுவதும் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது. இந்தியாவில் 2014ம் ஆண்டுக்கு முன் 387ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 654ஆக உயர்ந்துள்ளது. 2014க்கு முன் 51,348ஆக இருந்த இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான இருக்கை 94 சதவீதம் அதிகரித்து 99,763ஆக உயர்ந்துள்ளது. 31,185ஆக இருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இருக்கை 107 சதவீதம் அதிகரித்து தற்போது 64,559ஆக அதிகரித்துள்ளது. மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கான இருக்கைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் நிர்ணயித்துள்ள தரநிலை, விதிகளை பின்பற்ற தவறியதாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வௌியாகியுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் மேலும் 100 கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல்கள் வௌியாகியுள்ளது.

கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் படி செயல்படவில்லை. அங்கு சிசிடிவி கேமராக்கள், ஆதார்-இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை நடைமுறைகள், ஆசிரியர் பட்டியல்கள் தொடர்பான பல குறைபாடுகள் தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் திடீரென மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டதாகவும் அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலளித்த மருத்துவத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகையில்,
இதுபோன்ற சோதனை நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது. உலக அளவில் இந்தியாதான் அதிக மருத்துவர்களை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் இந்திய மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை உலகம் இழக்கும். ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவை நம்பும் தேசிய மருத்துவ ஆணையம் காலை 8 மணி முதல் 2 மணி வரை பணியாற்றும் மருத்துவ ஆசிரியர்களின் வருகையை மட்டுமே கருத்தில் கொள்கிறது.

ஆனால், காலநேரம் பார்க்காமல் சேவை உணர்வுடன் பணியாற்றும் மருத்துவர்களை பற்றி அது யோசிக்கவில்லை. இதுதான் பிரச்னைக்கு காரணம்’’ என்று தெரிவித்தனர். இருப்பினும் அங்கீகாரம் ரத்து செய்யும் முடிவு மருத்துவ மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மக்களவை தேர்தலில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை!