சரத்பவார் ராஜினாமா செய்த நிலையில் உயர்நிலை குழு கூடுகிறது தேசியவாத காங். தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டி?: அண்ணன் மகன், மகளிடையே மோதல்

மும்பை: தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அந்த கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடும் நிலையில், 4 மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. சரத்பவாரின் அண்ணன் மகன் மற்றும் அவரது மகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 1999ம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளாக கட்சியின் தலைவராக இருந்த சரத் பவார் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்ய மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சுனில் தாட்கரே, கே.கே.சர்மா, பி.சி.சாக்கோ, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, சாகன் புஜ்பால், திலீப் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோபி, ஜிதேந்திர அத்வாத், ஹாசன் முஷ்ரிப், தனஞ்ஜெய் முண்டே, ஜெய்தேவ் கெய்க்வாட் ஆகிய 15 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆலோசனை நடத்தி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கட்சியின் உயர்நிலைக் குழு இன்று கூடுகிறது. இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியல் மட்டுமன்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சரத்பவாரின் ராஜினாமாவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதா அல்லது புதிய தலைவரை தேர்வு செய்வதா? என்பது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. சரத்பவாரின் அண்ணன் மகனும், எதிர்கட்சி தலைவருமான அஜித் பவார், புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் தான் அந்த பதவிக்கு விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இருந்தும் புதிய தலைவர் பட்டியலில் அஜித் பவார், பிரபுல் படேல், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே ஆகிய நான்கு பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. கடந்த சில நாட்களாக கட்சியை கைப்பற்றுவதில் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 40 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதனால் தேசியவாத காங்கிரஸ் உடையும் சூழல் ஏற்பட்டது. இதன் அடிப்படையிலேயே சரத் பவார், அஜித் பவாருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதனால் பாஜகவில் இணையும் முடிவை அஜித் பவார் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?