மாயமான 121 குழந்தைகள் மீட்பு: தமிழக காவல்துறை அதிரடி

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமான குழந்தைகள் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை மூலம் 2வது நாளில் மொத்தம் 121 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஒருங்கிணைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த 2 நாட்களில் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 24 ஆண் குழந்தைகள் மற்றும் 97 பெண் குழந்தைகள் என மொத்தம் 121 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். காவல் துறையில் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

முடி ஒரு பாதுகாப்பு கோடை காலத்தில் மொட்டை அடிக்க கூடாது: மருத்துவர் தேரணிராஜன் அறிவுறுத்தல்

பிரஸ், காவல், டாக்டர், வக்கீல் ஸ்டிக்கர்களுக்கான காலக்கெடு முடிந்த நிலையில் சென்னை முழுவதும் 150 இடங்களில் போக்குவரத்து போலீஸ் வாகன சோதனை: மோட்டார் வாகன சட்டப்படி ஸ்டிக்கர்களை கிழித்து அபராதம் விதிப்பு

கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு