மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்: ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரி அங்கு பரவலான வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். குறிப்பாக ரக்கைன் மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய குழுக்கள், ராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இருதரப்புக்கும் கடுமையான சண்டைகள் நடக்கிறது. கடந்த நவம்பர் முதல் மியான்மர் நகர மக்கள், இந்தியாவின் மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி வருகின்றனர். இவர்களில் மியான்மர் ராணுவ வீரர்களும் அடக்கம். இவ்விவகாரம் இந்திய அரசின் பாதுகாப்புக்கு சிக்கலையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

நாகாலாந்து, மணிப்பூர் உட்பட இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளை மியான்மர் நாடானது 1,640 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த நிலையில் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிவிப்பில், ‘மியான்மரில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த விவகாரம் இந்தியாவுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே ரக்கைன் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்கள், அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். மேலும் ரக்கைன் மாநிலத்திற்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்