முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி, அறைகள், வாகன சவாரி முன்பதிவில் சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள தங்கு விடுதிகளில் தங்க முதுமலை புலிகள் காப்பகத்தின் www.mudumalaitigerreserve.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து தங்க முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இணையதளம் அப்டேட் செய்யப்பட்டது.

அதில், சுற்றுலா பயணிகள் முதுமலையில் உள்ள அறைகள் முன்பதிவு செய்து கொள்வதுடன், வனத்திற்குள் வாகன சவாரி செய்வதற்கும், தெப்பகாடு யானைகள் முகாமினை பார்வையிடவும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், சமீபகாலமாக சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் அறைகள் மற்றும் வனத்திற்குள் வாகன சவாரி செய்ய முன்பதிவு செய்து விட்டு, நேரடியாக முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தை அணுகும் போது, அவ்வாறான முன்பதிவு ஏதுவும் பதிவாகவில்லை என கூறப்படுவதாக ஏராளமான சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில், mudumalainationalpark.in என்ற பெயரில் போலி இணையதள பக்கத்தை உருவாக்கி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வடமாநிலத்தை சேர்ந்த ஏமாற்றும் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த மோசடி சம்பவம் அரங்கேறியிருப்பதாக தெரிகிறது. சுற்றுலா பயணிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முன்பதிவிற்கும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை என பல லட்சம் வசூலித்து ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. எனவே, முதுமலையில் அறைகள் முன்பதிவு, சவாரி முன்பதிவு செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகள் அதிகாரபூர்வ வெப்சைட்டில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். போலியான இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாஜ, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் மோதல்

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜ திட்டம்: சச்சின் பைலட்

வலுவான அரசு அமைந்ததால் வெடிகுண்டு வைத்திருந்த பாக்., கையில் திருவோடு தந்துள்ளோம்: பிரதமர் மோடி பிரசாரம்