மபியில் இரவு 10 மணி தாண்டியதால் சவுகான் மைக்கை ஆப் செய்த போலீசை மிரட்டிய எம்எல்ஏ: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் இரவு 10 மணி தாண்டி பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் மைக்கை அணைத்த போலீசை ‘தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்’ என பாஜ எம்எல்ஏ மிரட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மக்களவை தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பாஜ சார்பில் போட்டியிடுகிறார். நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது தொகுதிக்கு உட்பட்ட மண்டிதீப் பகுதியில் சவுகான் இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரி, இரவு 10 மணி ஆகிவிட்டதாகவும், 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு முரணானது எனக்கூறி, சவுகான் பேசிக் கொண்டிருந்த மைக்கை ஆப் செய்தார். தனது கைக்கடிகாரத்தை பார்த்த சவுகான் மணி 10 ஆக இன்னும் நேரம் இருப்பதாக கூறினார். மைக் ஆப் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த போஜ்பூர் பாஜ எம்எல்ஏ சுரேந்திர பட்வா, ‘‘இந்த மாதிரி செஞ்சா தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவோம்’’ என பொது இடத்திலேயே போலீஸ் அதிகாரியை மிரட்டி உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தனோபியா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் துணை கலெக்டர் சந்திரசேகர் வத்சவா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி உள்ளார்.

Related posts

பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி மற்றும் அம்பானி கேட்பதை 2 நிமிடங்களில் நிறைவேற்றுகிறார்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

பல ஆண்டுகளாக மின்கட்டணம் பாக்கி; இருளில் மூழ்கியது பாம்பன் பாலம்: இரவில் வாகன ஓட்டிகள் அவதி

குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்