ம.பி.யில் பணம் கேட்கும் வீடியோ வெளியீடு ஒன்றிய அமைச்சர் மகன் மீது எடுத்த நடவடிக்கை என்ன?: சிபிஐ, ஐடி, ஈடி என்ன செய்கிறார்கள்: ராகுல் காந்தி சரமாரி கேள்வி

ஹர்தா: ம.பி.யில் பணம் கேட்கும் வீடியோ வெளியானது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மகன் மீது மோடி அரசு, சிபிஐ, ஐடி, ஈடி எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரஸ்எம்பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.மபியில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவ.17ம் தேதி ஓட்டுப்பதிவு நடப்பதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அங்கு ஹர்தா நகரில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒன்றிய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மகன் தேவேந்திரா தோமர் ஒரு வீடியோவில் பணம் கேட்பது போன்று வெளியானது. பல கோடி கேட்டு அவர் பேசும் வீடியோ தேர்தல் நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ராகுல்காந்தி பேசியதாவது:

ஒன்றிய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மகன் தேவேந்திரா தோமர் விவசாயிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பணத்தை திருடுவது போன்ற காணொளி வெளியாகி உள்ளது. அவரிடம் விசாரிக்க அமலாக்க இயக்குனரகத்தை மோடி அரசு அனுப்பியிருக்கிறதா? ம.பி.யில் உள்ள பாஜ அரசு 50 சதவீத கமிசனில் வேலை செய்கிறது. எல்லாவற்றிலும் ஊழலில் ஈடுபடுகிறது. விவசாயிகள், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் பணத்தை எந்தவித பயமும் இல்லாமல் அச்சமின்றி, வெளிப்படையாக வீடியோ அழைப்பு மூலம் திருடும் ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகனின் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மோடி இதில் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி., துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளார்களா?

2020ம் ஆண்டு மார்ச் மாதம் மபியில் 27 லட்சம் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வேலையை அப்போதைய முதல்வர் கமல்நாத் தொடங்கிய பின்னர், பெரிய தொழிலதிபர்களுடன் கூட்டு சேர்ந்து பாஜ வீழ்த்தியது. இதனால் பாஜ ஆட்சியில் 18,000 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதானி போன்ற தொழிலதிபர்களின் நலனுக்காக பணமதிப்பு நீக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் நாட்டின் சாதாரண குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு கருப்புப் பணத்தின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் என்று பாஜ அரசு கூறியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மபியில் 500 தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக பொய் கூறுகிறார்.

பாஜ தலைவர் ஒருவர் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்து, வீடியோ எடுத்தார். அது வைரலாகும். அவர்கள் வெட்கமற்றவர்கள். அவர்களின் சிந்தனை இந்த வீடியோவில் மறைந்துள்ளது.பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலதிபர்களாக மாற வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது, ஆனால் பாஜ அவர்களை ஆங்கிலக் கல்வியிலிருந்து விலக்கி வைக்க விரும்புகிறது. பாஜ தலைவர்கள் தங்கள் மகன்களும் மகள்களும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பழங்குடியினர் படிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்