2024 தேர்தலில் பிரதமராக மோடி வேண்டுமா? ராகுல் வேண்டுமா?: அமித்ஷா சரமாரி கேள்வி

பதான்: வருகிற மக்களவை தேர்தலில் வென்று பிரதமராக மோடி வரவேண்டுமா அல்லது ராகுல் வரவேண்டுமா என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களிடம் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் 9 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள சித்பூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியதாவது: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ராகுல் விடுமுறையில் வெளிநாடு செல்கிறார். அங்கு அவர் நாட்டை விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தி தனது முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்க விரும்புகிறேன். மோடி ஆட்சியில் நாடு மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிரான விஷயங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தவில்லை.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தையும், தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க ‘செங்கோல்’ நிறுவப்படுவதையும் நீங்கள் எதிர்த்தீர்கள். செங்கோலை ஜவஹர்லால் நேரு நிறுவாததால் மோடி அதைச் செய்தார். மோடி குஜராத்தில் இருந்து நாட்டின் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தொடங்கினார். அதன்பின் குஜராத் மாடல், இந்தியாவின் மாடலாக மாறியது. வரும் 2024ல் யார் பிரதமர்? மோடியா அல்லது ராகுல் காந்தியா என்பதை மக்கள் ஒன்றுபட்டு முடிவு செய்ய வேண்டும். நான் எங்கு சென்றாலும், மோடிக்கு ஆதரவாக மக்கள் இருப்பதைக் காண்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்

19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருவண்ணாமலை – சென்னை பீச் தினசரி ரயில் தொடங்கியது: ‘அரோகரா’ முழக்கத்துடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு

உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் பலி?