அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்; போராட்டம் நடத்த திமுக தயங்காது: ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சென்னை: சென்னையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; சிதம்பரம் தீட்சிதர் வீட்டில் நடந்த குழந்தை திருமணத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார் ஆளுநர். தற்போது குழந்தை திருமணம் நடந்ததை அமல்படுத்தும் வகையில் வீடியோ வெளியாகி உள்ளது. கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று ஆளுநர் அறியவில்லையா என்று தங்கம் தென்னரசு கேள்வி.

இந்தியாவில் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 26 தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. நிதி ஆயோக் அறிக்கையிலும் தமிழ்நாடு கல்வித்துறையில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்தில் உள்ளது. அகில இந்திய அளவில் வெளியிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதை மறைத்துவிட்டு ஆளுநர் பேசுவதாக தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகம் வேந்தராக இருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டின் கல்வி தரத்தை மறைத்து விட்டு பேசுவதாக அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சியால் 108 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டில் அரசியல் பேசியுள்ளார் ஆளுநர் ரவி. துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசுவதை அரசு ஏற்கவில்லை. ரூ.1.87 லட்சம் கோடி முதலீட்டின் மூலம் 1.94 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவங்களின் 47 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பே கிடைப்பதில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக கண்டனம்.

2011-ல் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி சீனா சென்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது. தொழில் நடத்துவதற்கு உகந்த சூழல் தமிழ்நாட்டில் இருப்பதால்தான் பல நிறுவனங்கள் இங்கு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடு வந்துள்ளது.

கல்வி, தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டை பற்றி தவறான கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவதை ஏற்க முடியாது. ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது என்பதே எங்களின் கோரிக்கை; தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக தயங்காது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!

ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது: சரத் பவார் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசனுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு..!!