திருப்பதியில் மினி பிரம்மோற்சவம் ஏழுமலையான் கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி: ஒரே நாளில் 7 வாகனங்களில் சுவாமி பவனி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி நாளான நாளை மறுநாள் ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுேதாறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது 9 நாட்கள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதிஉலா வருவார். ஆனால் சூரியஜெயந்தி நாளான ரதசப்தமி நாளன்று அதிகாலை முதல் இரவு வரை ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை ‘மினி பிரம்மோற்சவம்’ என பக்தர்கள் அழைப்பார்கள்.

அதன்படி ஏழுமலையான் கோயிலில் நாளை மறுநாள் ரதசப்தமி நடைபெற உள்ளது. இதையொட்டி பிரம்மோற்சவ நாட்களில் நடைபெறும் வாகனங்களில் 7 வாகனங்களில் மலையப்பசுவாமி அதிகாலை முதல் இரவு வரை மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்மகிஷோர் மற்றும் திருப்பதி எஸ்பி மல்லிகாகர்க் ஆகியோர் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். அப்போது 4 மாடவீதிகளில் பக்தர்கள் இருக்கும் கேலரிகளில் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல் போக்குவரத்து பிரச்னை ஏற்படாமல் இருக்கவும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் வழிகாட்டி பலகைகள் அமைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் ரதசப்தமிக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: ரதசப்தமியின்போது பக்தர்களுக்கு வெயில் தாக்கம் ஏற்படாதபடி அகிலாண்டம் மற்றும் மாடவீதிகளில் நிழற்பந்தல் அமைப்பட்டுள்ளது. வீதிகளில் பக்தர்கள் நடக்கும்போது பாதிக்காமல் இருக்க கூல்பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. கேலரிகளில் உள்ள பக்தர்களுக்கு தயிர்சாதம், புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட அன்னதானம், குடிநீர், மோர், டீ, காபி, பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லட்டு கவுன்டரில் வழக்கமாக இருக்கும் 4 லட்சம் லட்டுகளுடன் கூடுதலாக 4 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ஏழுமலையான் கோயிலில் நேற்று 68,363 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 19,609 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.4.55 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 3 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்