மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை நிவாரண பணிக்கு 4519 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமனம்: 11 புயல் பாதுகாப்பு மையங்கள்; அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 குழுக்களக் அமைக்கப்பட்டுள்ளது. 11 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கூட்டம் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்பி ராமலிங்கம், எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஆயவுக்கூட்டம் நடைபெற்றது. நேற்றைய தினம் சராசரியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. இன்றைய தினம் 2 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற்றப்படுவதையும் ஆய்வு செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 புயல் பாதுகாப்பு மையங்கள், 4 பல்நோக்கு பாதுகாப்பு நிவாரண முகாம்கள், 26 முன்னெச்சரிக்கை கருவிகள், 346 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் மிகவும் தாழ்வான பகுதிகளில் 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 4519 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார் தெரிவிக்க 04364 222588, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களும், 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 65 நபர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்து சீர்காழியில் 30 நபர்களும், தரங்கம்பாடியில் 35 நபர்களும் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் எஸ்பி மீனா, டிஆர்ஓ மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் கொள்ளிடம் வட்டாரத்திற்குட்பட்ட திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற்றப்பவதையும், வேட்டங்குடி ஊராட்சி முடவனாற்றில் நீரோட்டத்தை அமைச்சர் பார்வையிட்டு, கரைகளின் பலத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து தொடுவாய் கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் புதுப்பட்டினம் ஊராட்சி பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதிகளில் சூழந்துள்ள மழைநீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 346 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் வட்டாரம், புதுப்பட்டிணம், பழையாறு சுனாமி குடியிருப்பு பகுதியில் இதற்கு முன் பெய்த கனமழையால் 600 குடியிருப்பு வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது. அதனை மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றி இங்குள்ள மக்களுக்கு உடனுக்குடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்துகொண்டிருப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்துத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக ஒரு தனி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே இந்த கட்டுபாட்டு அறைக்கு 04364 222588 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும், 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் பாதிப்புகளை தெரிவிக்கலாம். அனைத்துறை அரசு அலுவலர்களின் முழு ஒத்துழைப்போடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பருவமழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முறையாக கணக்கெடுப்பு செய்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாய்கால்கள், சாலைகள், சிறு பாலங்கள் சேதமடைந்ததை ஆய்வு செய்துள்ளோம்.இவற்றை கணக்கெடுப்பு செய்து உடனடியாக சரிசெய்யப்படும் என்றார். ஆய்வின்போது மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, எம்பி. ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம்,கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

* 11 புயல் பாதுகாப்பு மையங்கள், 4 பல்நோக்கு பாதுகாப்பு நிவாரண முகாம்கள், 26 முன்னெச்சரிக்கை கருவிகள், 346 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல் மிகவும் தாழ்வான பகுதிகளில் 12 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 4519 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Related posts

19ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

43 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு