மே-2, 3ம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மே 2 மற்றும் 3-ம் தேதிகளில் வெப்ப அலை வீசும். வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

இன்று, நாளை, மே 1 முதல் 5 வரை தமிழ்நாட்டில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் மே 1 வரை குமரி, நெல்லையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 2-ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 3, 4, 5-ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய வட தமிழ்நாடு உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களில் பிற்பகலில் 30 முதல் 50 சதவீதமாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், தர்மபுரியில் 41.2° செல்சியஸ், வேலூரில் 41.1° செல்சியஸ், திருத்தணியில் 40.6° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.2° செல்சியஸ் மற்றும் சேலத்தில் 40.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.6° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

பேருந்து டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழப்பு: வாக்களித்து விட்டு மீண்டும் பணிக்காக ஐதராபாத் திரும்பிய போது சோகம்!

பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பம்

சந்திரகாச்சி அந்தியோதயா விரைவு ரயில் 7 மணி நேரம் தாமதம்