கடந்த மார்ச் மாதத்தில் இந்திய தொலை தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117.2 கோடியாக அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் இந்திய தொலை தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117.2 கோடியாக அதிகரித்துள்ளது. இந்திய தொலை தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து தொலைத்தொடர்பு துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிப்பதாவது: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 30.5 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை சேர்த்தது. இதன் மூலம் கடந்த பிப்ரவரியில் 42.71 கோடியாக இருந்த அந்நிறுவனத்தின் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 43 கோடியை கடந்தது.

அதே மாதத்தில் வோடபோன் ஐடியா தனது 12.12 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை இழந்தது. இதன்மூலம் பிப்ரவரில் 23.79 கோடியாக இருந்த அந்நிறுவன மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச்சில் 23.67 கோடியாக குறைந்தது. கடந்த மார்ச்சில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 10.37 லட்சம் மொபைல் சந்தாதாரர்களை கூடுதலாக சேர்த்தது. இதனால் பிப்ரவரியில் 36.98 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொபைல் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச்சில் 37.09 கோடியாக உயா்ந்தது. கடந்த மார்ச்சில் ஒட்டுமொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை முந்தைய பிப்ரவரி மாதத்தைவிட 0.86 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி இறுதியில் 83.93 கோடியாக இருந்த அந்த எண்ணிக்கை மார்ச் இறுதியில் 84.66 கோடியாக உயர்ந்துள்ளது. பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொருத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ (43.85 கோடி), பாரதி ஏர்டெல் (24.19 கோடி), வோடபோன் ஐடியா (12.48 கோடி) உள்ளிட்ட முதல் 5 நிறுவனங்கள் மட்டும் 98.37 சதவீத சந்தை பங்கை வகிக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை 117.2 கோடியாக அதிகரித்தது. இது, முந்தைய பிப்ரவரி மாதத்தைவிட 0.21 சதவீதம் உயர்வாகும். இவ்வாறு அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு!

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்