மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்களுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை..!!

டெல்லி: மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்களுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில், ஒற்றை கோரிக்கையாக மணிப்பூர் விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருகிறது. ஆளும் அரசு அதற்கு செவி சாய்க்காமல், எதிர்வினையாற்றும் நிலையிலும் மணிப்பூர் கலவரம், வன்கொடுமைக்கான நீதி, அதனை கட்டுப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை போன்றவற்றை கோரியும், உண்மை நிலையை பிரதமர் மோடி விளக்கவும் வலியுறுத்தியது.

3 மாதமாக கலவரம் நடக்கும் நிலையில், நிர்வாண வீடியோ வெளியான பிறகே, நாடாளுமன்றத்திற்கு வெளியே, பிரதமர் வாய் திறந்து குற்றவாளிகள் தப்ப முடியாது எனக் கூறியிருக்கிறார். ஆனால், நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்க பிரதமர் இன்னும் முன்வராமல் இருப்பது மக்கள் மீதுள்ள அக்கறையின்மையை காட்டுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, அடுத்தகட்ட நகர்வுக்கு சென்றிருக்கிறது.

மணிப்பூர் உண்மை நிலவரத்தை பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றிய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். மணிப்பூர் மக்கள் மீது ஆளும் அரசு கவனம் செலுத்தாத நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் குழு நேரடியாக களமிறங்கினர். அங்கு நடந்துள்ள கலவரம், பாதிப்பு, காரணமானவர்கள் குறித்து அறிய, கள ஆய்வுக்கு இந்தியா கூட்டணியின் சார்பில் 21 எம்பிக்கள் மணிப்பூர் சென்றனர்.

இவர்கள் மக்களிடம் விசாரித்து உண்மை நிலையை அறிந்து அறிவிக்க உள்ளனர். இப்பயணத்தில் தமிழகத்தின் திமுக சார்பில் கனிமொழி, விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் என 3 எம்பிக்கள் சென்றனர் . இது தவிர காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய், திரிணாமுல் எம்பி சுஷ்மிதாதேவ் என அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இடம்பெற்றனர்.

இவர்கள் இரண்டு குழுவாக பிரிந்து, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிவதோடு, அவர்கள் அப்பிரச்னையில் இருந்து மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதை கள ஆய்வு செய்தனர். இந்நிலையில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்களுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது .  நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் கடைபிடிக்கவேண்டிய உத்திகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . மணிப்பூர் கள நிலவரம் குறித்து எம்.பி.க்கள் குழுவினர் எதிர்க்கட்சி தலைவர்களிடம் விளக்கி வருகின்றனர்.

Related posts

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!