மாங்கனி கட்சியை டெபாசிட் இழக்க செய்ய மாஜி மந்திரி எடுத்திருக்கும் சபதம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘லாட்ஜாக மாறிய மண்டபத்துல ஏதேதோ நடந்தும் காக்கிகள் கவனிக்குறதில்லையாமே, என்னவாம்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல பல மண்டபங்கள்ல திருமணம், விசேஷங்களுக்கு சரியா புக்கிங் ஆகுறதில்லையாம்.. இதுல செய் என்று தொடங்கி ஆறுல முடியுற நகரத்துல சில குறிப்பிட்ட மண்டபங்கள்ல அத்தி பூத்த மாதிரி எப்பயாவது புக்கிங் ஆகுமாம்.. இதனால அந்த மண்டபங்கள்ல எந்த புரோகிராமும் இல்லாத நேரத்துல, அதை லாட்ஜ்களாகத்தான் பயன்படுத்தி வர்றாங்களாம்.. இதுபோல மண்டபங்கள்ல புக்கிங் ஆகுற அறைகள்ல வந்து தங்குறவங்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லையாம்.. திடீர்னு சில கும்பல் நுழைஞ்சி, உடமைகளையும், கரன்சிகளையும் அடிச்சி பிடுங்கிடுறாங்களாம்..

இப்படி பல வருஷமா நடந்து வருதாம்.. இது தெரியாம, சில நாட்களுக்கு முன்னாடி, இந்த நகரத்துல பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருக்குற ஒரு மண்டபமாக இயங்குற, அறையில் ஆண் நபரோட தங்கியிருந்த ஒரு பெண்ணை 3 பேர் கும்பல் அடிச்சி பிடுங்க போயிருக்காங்க.. அதுல கொலையும் நடந்திடுச்சு.. இது கொலையா மாறியதால இப்பத்தான் அடிச்சு பிடுங்குற கும்பலோட அட்டூழியம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திருக்குதாம்.. இதனால பாதிக்கப்பட்டவங்க புற்றீசல்போல புகார் சொல்கிறாங்களாம்.. அதோட, மண்டபமாக கட்டி லாட்ஜ் அறையாக மாறிய மண்டபத்தில ஏதேதோ நடக்குதாம்.. காக்கிகளும் கவனிக்கப்படுறதால, இதை அவங்க கவனிக்குறதில்லையாம்.. மாவட்ட உயர் காக்கியாவது இனி கவனிக்கணும்னு கோரிக்கை குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தாமரை கூட்டணி கட்சி தலைவர்கள பற்றி மாஜி எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சால் இலைக்கட்சி வேட்பாளர் தயக்கத்துல இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோரம் நாடாளுமன்ற தொகுதி இலைக்கட்சி வேட்பாளர் மாஜி அமைச்சர் மணியானவர் ஆதரவாளரான கடைசி பாதியில் முடியக்கூடிய சங்கர் தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாராம்.. இவருக்கு ஆதரவா மாஜி அமைச்சர் மணியானவர், நிர்வாகிங்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வர்றாங்க.. பிரசாரம் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை மக்களிடம் தொடர்ந்து எதிர்ப்பு அலைதான் வீசுகிறதாம்…. தொகுதிக்கு தேவையான வாக்குறுதிகளை அள்ளி விட்டாலும் வாக்காளர்கள் வேட்பாளரை கண்டு கொள்ளவில்லையாம்.. இதனால் வேட்பாளர், மாஜி அமைச்சர், இலைக்கட்சியினர் பிரசாரம் முடிந்து திரும்பு போது கடும் அப்செட்டில் தான் செல்கின்றனராம்.. இந்த பிரச்னைக்கு மத்தியில் கடலோர அவுரி திடலில் நடந்த இலைக்கட்சி பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் சங்கரை ஆதரித்து பேச வந்த இலைக்கட்சி மாஜி எம்எல்ஏ, தாமரை கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களை கொச்சையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசிட்டு சென்றாரம்… இந்த தகவல் தெரிய வந்த தாமரை கூட்டணி கட்சியில் உள்ள தொண்டர்கள் இலைக்கட்சி மாஜி அமைச்சர் மற்றும் வேட்பாளர் மீது உச்சகட்ட கோபத்தில் இருப்பதோடு வேட்பாளர், மாஜி அமைச்சரை பிரசாரம் செய்ய ஏரியா பக்கம் விடக்கூடாதுனு உறுதியாக இருக்காங்களாம்..

இதை தெரிஞ்ச வேட்பாளர் சங்கர், தொகுதி பக்கம் பிரசாரத்திற்காக சென்றால் ஒரு பக்கம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.. இதில் வேற மாஜி எம்எல்ஏவின் இந்த சர்ச்சை பேச்சால் தாமரை கூட்டணி கட்சியில் உள்ள தொண்டர்கள் தொகுதிக்குள் விடக்கூடாது என்கிறார்கள். இவர்களை எப்படி எதிர்கொள்வது, சமாளிப்பது என தெரியாமல் தேர்தல் பிரசாரத்திற்காக தொகுதிக்குள்ளே எப்படி செல்வதுனு வேட்பாளர் சங்கர் தயக்கம் காட்டி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சொந்த மாவட்டத்தில மாங்கனி கட்சியை டெபாசிட் இழக்க செய்ய மாஜி அமைச்சர் எடுத்த சபதம் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி கட்சியின் சொந்த மாவட்டத்தில் நிர்வாகிகள், இலை கட்சியின் பேரத்திற்கு விலைபோய் வருகிறார்களாம்.. கூட்டணிக்கு கூட்டுவச்சி அசிங்கப்படுத்தியதால் கோபத்தில் இருக்கும் மாஜி அமைச்சரோ சொந்த மாவட்டத்தில் அவங்க கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்ய சபதம் எடுத்து வேலை செய்து வருகிறாராம்.. மக்களவை தேர்தலில் மாங்கனி கட்சியுடன் 2 முறை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி, கடைசியில் பிடிகொடுக்காத கட்சியின் நிறுவனர் தாமரை பக்கம் சாய்ந்தாராம்.. அதிலிருந்து தன்னை கூட்டுவச்சி அசிங்கபட்ட இலைகட்சியின் மாஜி அமைச்சர் கடுமையாக விமர்சித்து, தற்போது மாங்கனி கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகளை பேரம்பேசி இலைகட்சிக்கு வாக்குகளை சேகரித்து வருகிறாராம்.. ஏற்கனவே தாமரை பக்கம் சென்றதற்கு மாங்கனி கட்சி நிர்வாகிகள் மத்திலேயே பெரும் அதிருப்தி எழுந்திருக்க, அதை சாதகமாக்கிக் கொண்ட இலைகட்சி மாஜி அமைச்சர் மாவட்டம் முழுவதும் அதிருப்தியாளர்கள், பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஏற்ப பேரம் நடத்தி வருகிறாராம்..

இந்த அசைன்மென்ட் எல்லாத்தையும் மாஜி அமைச்சரின் சகோதரர் கச்சிதமாக முடித்து வருகிறாராம்.. எங்க கூட்டணிக்கு வராததால் டெபாசிட் இழக்கும் வகையில் மாங்கனி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் கங்கணத்தில் இந்த தொகுதியில் சபதம் எடுத்த இலைகட்சி மாஜி அமைச்சர் கட்சி நிர்வாகிகளுக்கு வலைவிரித்து வாக்குகளை சேகரித்து வருகிறாராம்.. விலைபோகும் நிர்வாகிகளால் மாங்கனி கட்சியோ அப்செட்டில் இருக்கிறதாம்.. கடந்த காலத்தில் தனித்து நின்றபோது வந்த வாக்குகள் வந்தால்கூட போதும் என்ற மனநிலையில்தான் மாங்கனி கட்சி பிரசாரமும் சென்று கொண்டிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக 11 பேர் உயிரிழப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை: நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி