வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது: துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்றபோது சிக்கினார்

மீனம்பாக்கம்: வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூரை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, துபாய் நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (34). இவர் மீது, வரதட்சணை கொடுமை, மிரட்டுதல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளன. அவரை, போலீசார் தேடி வந்தனர்.

ஆனால் பிரேம்குமார் போலீசிடம் சிக்காமல், தலைமறைவாக இருந்து வந்தார். அதோடு அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடவும் திட்டம் தீட்டினார். இந்த தகவல் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்தது. இதனையடுத்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், பிரேம் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்துக்கொண்டு இருந்தனர். அப்போது துபாய் நாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக, நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தால் தேடப்பட்டு வரும் பிரேம் குமார் அந்த விமானத்தில் இருந்துள்ளார்.

அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது, அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது. இதனையடுத்து பிரேம்குமாரை பிடித்து குடியுரிமை அலுவலக அறை ஒன்றில் பாதுகாப்புடன் அடைத்து வைத்ததோடு, அவருடைய துபாய் பயணத்தையும் ரத்து செய்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய தனிப்படை போலீசார், பிரேம்குமாரை கைது செய்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். பின்னர் அவரை நெய்வேலிக்கு கொண்டு செல்கின்றனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸில் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு: ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம்