மலையாள சினிமாவில் வெளிநாட்டு கருப்புப் பணம் முதலீடு பிரபல நடிகருக்கு ரூ.25 கோடி அபராதம்: மேலும் 3 தயாாிப்பாளர்கள் சிக்கினர்; அமலாக்கத்துறை தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் வெளிநாட்டிலிருந்து ஏராளமான அளவில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஒருவரிடமிருந்து அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபராதம் வசூலித்துள்ளது. மலையாள சினிமாவில் வெளிநாட்டில் இருந்து பெருமளவு கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதாகவும், இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் படங்கள் தயாரிக்கப்படுவதாகவும் ஒன்றிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணையில் 4 தயாரிப்பாளர்கள் வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை வாங்கி படம் தயாரித்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இதில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவர் வெளிநாட்டில் வைத்து பெருமளவு கருப்புப் பணத்தை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற 3 தயாரிப்பாளர்களிடமும் வருமானவரித்துறையும், அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த 3 தயாரிப்பாளர்களும் கடந்த சில வருடங்களில் ஏராளமான மலையாளப் படங்களை தயாரித்துள்ளனர். இதுபற்றியும் விசாரணை நடக்கிறது.

* போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு
மலையாள சினிமாவில் பெருமளவு போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது. இது தொடர்பாக நாத் பாசி மற்றும் ஷேன் நிகம் ஆகிய 2 இளம் நடிகர்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை பெற்று தயாரிக்கப்படும் படங்களின் படப்பிடிப்புத் தளங்களில் தான் பெருமளவு போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் ஒன்றிய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

Related posts

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு

சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது விசாரணையில் அம்பலம்

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல்