மகர விளக்கு பூஜை!: சரண கோஷத்துடன் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் குவியும் பக்தர்கள் கூட்டம்… 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் கட்டுக்கடங்காமல் காணப்படும் பக்தர்கள் கூட்டத்தால் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் புகழ் பெற்றவை. இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அந்த நாட்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். அதன்படி, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஐயப்பனை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர். சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து