மேனிலை தேர்வுகள் முடிந்தன 10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்

சென்னை: பிளஸ்2 தேர்வு முடிந்த நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், 10ம் வகுப்புக்கான தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடந்தது. அதன் தொடர்ச்சியாக 4ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்றுடன் முடிகிறது. மேற்கண்ட 2 தேர்வுகளைப் பொறுத்தவரை பிளஸ்2வில் 7 லட்சத்து 72 ஆயிரம் மாணவ மாணவியரும், பிளஸ் 1ல் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவ மணவியரும் தேர்வு எழுதியுள்ளனர். நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் 12,616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் தனித் தேர்வர்கள் 28 ஆயிரம் பேரும் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 3,350 பேர் கொண்ட பறக்கும் படை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல, இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்விலும் செல்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ மாணவியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், 2 முதல் 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் எனவும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

 

Related posts

என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல்

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்