விலை உயர்ந்த சொகுசு காரின் சாவி மாயம் நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் புகார்: கார் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை

சென்னை: சென்னை கோபாலபுரம் ராகவ வீரா அவென்யூவில், நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா(38) தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ‘‘மார்ச் 23ம் தேதி தனது வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள பிரபல மகளிர் கல்லூரிக்கு காரில் சென்று இருந்தபோது, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விலை உயர்ந்த சொகுசு காரின் சாவியை அதன் பவுச்சுடன் வைத்திருந்தேன். தற்போது அந்த சாவி திடீரென மாயமாகி உள்ளது. கார் சாவியை வீடு மற்றும் தனது கார் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, எனது கார் சாவியை மீட்டு தரவேண்டும்’’ என்று போலீசில் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

சவுந்தர்யா அளித்த புகாரின்படி, தேனாம்பேட்டை போலீசார் சவுந்தர்யாவின் கார் டிரைவர் மற்றும் வீட்டில் வேலை செய்யும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல மகளிர் கல்லூரியில் கார் நிறுத்தப்பட்டு இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீசார் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம், சொகுசு காரின் சாவி என்பதால் மற்றொரு சாவியை அந்த நிறுவனத்திடம் புதிதாக வாங்க வேண்டும். இதனால் தான் சவுந்தர்யா புகார் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், மாயமான சாவி குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

பெண்ணின் பலாத்கார வீடியோவை பெற்றோருக்கு அனுப்பி பணம் பறிப்பு: வக்கிர வாலிபர் சிக்கினார்

மே 7ம் தேதி நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு