சிறையில் சொகுசு வசதிக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்; சசிகலா, இளவரசிக்கு பிடிவாரன்ட்: விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சொகுசு வசதிகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலருக்கும் லஞ்சம் கொடுத்து வசதிகளை பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழுவை கர்நாடக அரசு அமைத்தது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி சிறையில் சில சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை என்றும், ஆனால் பணம் கைமாறியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார்தான் விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்திய நிலையில் வழக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளான டாக்டர் அனிதா, சுரேஷ் மற்றும் கஜராஜ் ஆகியோர் முறையே ஏ1 முதல் ஏ4 வரையும், ஐந்தாவது மற்றும் ஆறாவது குற்றவாளியாக சசிகலா மற்றும் இளவரசியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முதல் வாய்தாவுக்கு ஆஜரான சசிகலா தரப்பு நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க கேட்டுகொண்டது.

இதன்படி லோக் ஆயுக்தா நீதிமன்றமும் நேரில் ஆஜராக விலக்கு அளித்ததுடன் தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணையின்போது, ஒரு வாய்தாவுக்கும் நேரில் ஆஜராகவில்லை. இந்தநிலையில் வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை கவனித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், இரண்டு பேருக்கும் பிடிவாரண்ட் போட்டு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இருவருக்கும் ஜாமீன் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார். சசிகலா மற்றும் இளவரசிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவராண்ட் மீது இன்னும் சில நாட்களில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை கவனித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், இரண்டு பேருக்கும் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துளள்ார்.
* இருவருக்கும் ஜாமீன் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும்: வானிலை மையம் எச்சரிக்கை

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு