தாமரை வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பிருக்கு என்கிறார்: wiki யானந்தா

‘‘விளவங்கோடு இடைத்தேர்தலில் தாமரை வேட்பாளர் மாற்றப்படுவாராமே..’’ என்று சந்தேகத்தை கிளப்பினார் பீட்டர் மாமா. ‘‘விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தாமரை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் மீது உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தி நிலவ தொடங்கியுள்ளது. தொகுதியை எதிர்பார்த்துள்ள முன்னாள் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர்.

விளவங்கோடு தொகுதியின் வாக்குப்பதிவு நிலவரம் கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கட்சியின் விபரம் அறிந்த தலைவர்கள் பேச தொடங்கியுள்ளனர். கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு வேண்டியவர் வேட்பாளராக அறிமுகமான நிலையில் இப்போது விளவங்கோடு வேட்பாளர் மாற்றம் பற்றிக்கூட கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாம். அதனால் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பில் விளவங்கோடு தாமரை கட்சியினர் மட்டுமின்றி கன்னியாகுமரி மக்களவை தாமரை கட்சியினரே எதிர்பார்க்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்ளூரு வேட்பாளருங்க யாரும் கிடைக்காம, வெளியூர்ல இருந்து இறக்கியிருக்குறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மலர் கட்சியில மாநிலம் முழுவதுமாவே அந்தந்த தொகுதியை சேர்ந்தவங்களை நிற்க வைக்கலாம்னு பார்த்தா வேட்பாளருங்க யாரும் சிக்கல்லையாம். வெயிலூர்ல இலைகட்சியில இருந்து மலர் கட்சிக்கு தாவிய பெண்மணிய, நடராஜர் டெம்பில் இருக்குற தொகுதியில நிற்க வெச்சிருக்குறாங்க.

அதுமட்டும்தான்னு பார்த்தா, பக்கத்துல இருக்குற கிரிவலம் மாவட்டத்துலயும், குறிச்சி என்று முடியும் மாவட்டத்தைச் சேர்ந்த புராணக்கதையில வர்ற பெயர் கொண்டவரை நிறுத்தியிருக்குறாங்க. உள்ளூர்ல டிஸ்ட்ரிக்ட் பிரசிெடண்ட்கிட்ட எவ்வளவோ வற்புறுத்தினாங்களாம். ஆனா, அவரு நான் நிற்கவே மாட்டேன்னு ஒத்த கால்ல நின்னாராம். இதனால வேற வழியில்லாம வேற மாவட்டத்தைச் சேர்ந்தவரை நிறுத்த வேண்டியதா போயிடுச்சாம். வேட்பாளரும், ஆன்மிக மாவட்டம்னு நினைச்சு வந்திருக்காரு.

வந்த இடத்துல எதிர்பார்த்த அளவுக்கு யாரும் இல்லாததால ஏமாற்றமா போச்சாம். இப்ப பழம் கட்சியைத்தான் நம்பி இருக்குறதா விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க” என்றார் விக்கியானந்தா. ‘‘கரை சேர்ப்பாரா, காலை வாறுவாரா என பயந்து சரண்டர் ஆனாராமே சிவமானவர்” என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி நடுநிலை நாயகருக்கு தேஜ கூட்டணியில் அமைச்சராக வேண்டும் என்பது பெரும் கனவு. ஆனால் கிடைத்தது நாயகர் பதவிதான்.

இருப்பினும் அமைச்சர் ஆசை விடவில்லை. அதற்கு நேரமும் தற்போது கூடி வந்துள்ளது. புல்லட்சாமியின் மருமகன் சிவமானவரை, எம்பி தேர்தலில் எப்படியாவது நிறுத்தி பேக் செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும், அப்போதுதான் தனக்கு ரூட் கிளியர் ஆகும் என நினைத்து செயல்பட்டாராம். இதற்காக டெல்லி தலைமைக்கு சிவமானவரை தவிர வேறு யாரை வேட்பாளராக போட்டாலும், படு தோல்விதான் கிடைக்கும் என ஏகத்துக்கு ஏத்திவிட்டாராம்.

பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர் சிவமானவர்தான் சரியான் ஆள் என்று மேலிடப்பொறுப்பாளர் முதல், அமைப்பு செயலாளர் மகிழ்ச்சி ஜி வரை போட்டுக்கொடுத்தாராம். இதனால் சிவமானவருக்கும், நடுநிலை நாயகருக்குமே செம லடாய் ஆனது. ஆனால் இப்போது நாயகர் நினைத்தது போல சிவமானவரையே வேட்பாளராக போட்டுவிட்டார்கள் என்பதால், செம குஷியில் இருக்கிறாராம். அதோடு தேர்தலில் வெற்றிப்பெற்றாலும் ரூட் கிளியர், தோற்றாலும் சிவமானவரை டம்மி பீஸ் ஆக்கிவிடலாம் என்ற அரசியல் கணக்கில் இருக்கிறாராம்.

மேலும் ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க வேண்டும். இரண்டு கத்தி இருக்க கூடாது என நாயகரின் நினைப்பாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு பின்னால் நடுநிலை நாயகரின் தீராத அமைச்சர் கனவும் அடங்கியிருக்கிறதாம். அதேபோல் மாநில அரசியலில் தனக்கு போட்டியாக உள்ள மருமகன் பக்கம் நின்று புல்லட்சாமி கரை சேர்ப்பாரா? காலை வருவாரா? என்ற நிலைதான் இருக்கிறதாம். இதனால் மிரண்டு போன சிவமானவர், சாஷ்டங்கமாக மாமாவின்( புல்லட்சாமி) காலில் விழுந்து விட்டாராம்.

அதோடு வேட்பு மனுத்தாக்கல், நேரம், தேதி எல்லாம் அவரே தரட்டும் என கூறி முழுக்க சரண்டர் ஆகிவிட்டாராம்” என்றார் விக்கியானந்தா. ‘‘தூங்கா நகரில் இலை கட்சி சார்பில் மருத்துவர் களமிறக்கப்பட்டதில் செல்லமானவருக்கு சற்று வருத்தமாமே?” என்றார் பீட்டர் மாமா. ‘‘மருத்துவர் களமிறக்கப்பட்டது மேலிடத்து உத்தரவாக இருப்பதாலும், அதே நேரத்தில் செல்லமானவரின் மகனின் வளர்ச்சிக்கு எதிராக மருத்துவரின் வருகை இருப்பதாலும் உதயமானவரும், செல்லூராரும் சற்று ஆறுதலாக இருப்பதாகவும் இலை வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு ஓடுகிறது.

இதனால் இருவரும் மருத்துவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி இருக்கின்றனராம். செல்லமானவர் சில மாதங்களுக்கு முன்பு வரை தனது மகனுக்கு சீட் கேட்டு காய் நகர்த்தி வந்தார். பின்னர் அந்த முடிவை கைவிட்டு விட்டார். அதேசமயம், மருத்துவரின் செல்வாக்கு கட்சியில் ஓங்கிவிட்டால் தன் மகனின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் என்பதால் மருத்துவருக்கு வேலை செய்வதில் செல்லமானவர் சுணக்கம் காட்டுகிறாராம், உடனடியாக செல்லூரார் வேலையை துவக்கிய போதும், செல்லமானவர் மட்டும் கொஞ்சம் தாமதமாகவே எல்லாம் செய்கிறாராம்.

இதனால் செல்லமானவரின் ஆதரவாளர்கள் மேலிட உத்தரவை மதிப்பதா அல்லது செல்லமானவரை பின்பற்றுவதா என குழப்பத்தில் புலம்பி வருகின்றனர்” என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி மாவட்ட இலை கட்சி நிர்வாகிகள் புலம்பல் அதிகரிச்சிருச்சி போல” என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டத்தில் இலைக்கட்சியில இருக்கிற சீனியருக்கு சீட் தராம, வைட்டமின் ப வைத்துள்ளவருக்கு சீட் கொடுத்திட்டாராம் சேலத்து தலைவர். இதனால் சீனியருக்கு கொஞ்சம் வருத்தமாம். ஆனாலும் கூட்டணி எதிர்பார்த்தபடி அமையாததினால அவரு மனச தேத்திக்கிட்டாராம்.

அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் ஆறு எம்எல்ஏ தொகுதிக்கும் சென்று நிர்வாகிகளை பார்த்து பொன்னாடை அணிவிச்சாராம். அப்போ நிர்வாகிகளை சரியா கவனிக்கலையாம். இதனால் ஏமாந்து போன நிர்வாகிகள், ‘பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு கூட வைட்டமின் தரல. இப்படியே போனா தேர்தல் வேலையை எப்படி செய்யறதாம்ன்னு புலம்பத்தொடங்கியிருக்காங்களாம். அனுபவம் இல்லாதவர களத்தில இறக்கிட்டாங்க. அவருக்கு யாராவது வழிகாட்டலாம், தேர்தல் அலுவலகம் திறந்த பிறகு ப வைட்டமின் கிடைக்குமா அல்லது செலவு பண்ணணுமான்னு அப்படியே விட்ருவாங்களா என ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டு இருக்காங்களாம்” என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு

நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்