மதுபானங்களின் தரத்தை உறுதி செய்ய டாஸ்மாக் விற்பனை மையங்களில் திடீர் சோதனை நடத்த கோரி வழக்கு: ஐகோர்டில் இன்று விசாரணை

சென்னை: போலி மதுபான விற்பனையை தடுக்க, விற்பனை மையங்களில் திடீர் சோதனை நடத்த கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆர்.பூமிராஜ் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கடந்த மே 22ம் தேதி தஞ்சாவூரில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்திய 2 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். இதேபோல சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி விழுப்புரத்திலும், மதுராந்தகத்திலும் சுமார் 22 பேர் உயிரிழந்து விட்டனர். டாஸ்மாக் மதுபானக்கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்க மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

பார்களில் மதுபானங்களை விற்கவோ, சேமித்து வைக்கவோ சட்ட ரீதியாக அனுமதியளிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மதுபானங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான குடோன்கள் மற்றும் டாஸ்மாக் விற்பனை மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மதுபானங்களை, அருகில் உள்ள பார்களில் வைத்து விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும், என்று கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Related posts

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்

சில்லி பாயின்ட்…

ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜநடை: லக்னோவை வீழ்த்தி 8வது வெற்றி