எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த கோவளம் வாலிபருக்கு ஏர்போர்ட்டில் வரவேற்பு

சென்னை: எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் வாலிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் பச்சை (27). இவர், அலைச் சறுக்குப்போட்டிகளில் சர்வதேச அளவில் வெற்றிகளைப்பெற்றுள்ளார். அலைச்சறுக்கு பயிற்சியாளராகவும் உள்ளார். அதோடு மலையேற்றத்தின்மீது ஆர்வம் உடையவர். ராஜசேகருக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக ராஜசேகர் ஓராண்டாக மலையேற்றப் பயற்சியை இந்தியாவின் பல்வேறு இடங்களில் மேற்கொண்டார்.

இந்நிலையில் ராஜசேகர், கடந்த ஏப்ரல் 13ம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை மே மாதம் 19 ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்துள்ளார். ஒரு மாதம் கடுமையான குளிர், சறுக்கல்கள் என பல தடைகளைத் தாண்டி, விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி, சாதனை படைத்து விட்டு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையம் வந்த ராஜசேகருக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள், ராஜசேகரின் குடும்பத்தினர் நண்பர்கள் என்று ஏராளமானவர்கள் ராஜசேகரை வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த ராஜசேகர் பச்சை கூறுகையில், ‘நான் கோவளம் பகுதியை சேர்ந்த மீனவ குடும்பத்தை சேர்ந்தவன். எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்திருப்பது பெருமையாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் தமிழ்நாடு மக்கள், மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் சிறிய மலையில் துவங்கி, படிப்படியாக ஏற துவங்கினேன். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு பல்வேறு மலைகளை படிப்படியாக ஏறினேன். இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள மலைகளில் ஏறினேன். அதேபோல், நேபாளத்திலும் மலைகளில் ஏறி பயிற்சி எடுத்தேன். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லச் செல்ல, ஆக்சிஜன் குறைந்ததால், ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து சென்றேன். தற்போது சாதித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Related posts

கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்துக்கு நாளை விசாரணைக்கு ஆஜராக 4 பேருக்கு சம்மன்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் நிர்மலா தேவி

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!