மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. டெல்லி புதிய மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் துணை முதல்வராக இருந்த சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய்சிங் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 21ம் தேதி முதல்வர் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஜாமீன் கோரியும், அதேப்போன்று அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு இந்த விவகாரத்தில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்று தெரிவித்து மனுவை கடந்த 9ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. தற்போது மக்களவை தேர்தல் நேரம் என்பதால் உச்ச நீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்