மதுபானக் கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு

புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில்,‘‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, மனுவை விரைந்து பட்டியலிட்டு விசாரிப்பது குறித்து உடனடியாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அவரச வழக்காக பட்டியலிட்டு விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சந்தீப் குமாருக்கு தலைமை நீதிபதி அமர்வு ரூ,50ஆயிரம் அபராதம் விதித்தது.

உலகம் முழுவதும் ஆதாரவாளர்கள் உண்ணாவிரதம்
கெஜ்ரிவாலை கைதை கண்டித்து உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஆம் ஆத்மி தன்னார்வலர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய தூதரம் முன்பாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் நியூயார்க், பாஸ்டன், சான் பிரான்சிஸ்கோ, டல்லாஸ், லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டங்கள் நடந்தன. அப்போது கெஜ்ரிவால் கைது ஜனநாயக விரோத நடவடிக்கை எனவும், மோடி அரசு அவரை விடுவிக்கும் வரை ஓயமாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Related posts

விஷவாயு தாக்குதல்: புதுச்சேரியில் 2 பள்ளிகளுக்கு விடுமுறை

கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயிலில் வைகாசி ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட கூடுதல் வாக்குகள் எண்ணப்பட்டது ஏன்?.. தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா?