பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது: அரசு தரப்பில் ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பல்கலைக்கழக மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், பல்கலைக்கழக செயல்பாடுகளில் இடையூறு ஏற்படாமலும் தடுக்க, துணைவேந்தர்கள் நியமன நடைமுறைகளை உடனுக்குடன் முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், துணைவேந்தர்கள் தேர்வு நடைமுறைகளை எப்போது துவங்குவது, எப்போது முடிப்பது என கால நிர்ணயம் செய்து தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கடந்த ஆண்டும், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம், சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Related posts

மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ

கஞ்சா வாங்கி தருவதாக ரூ50 ஆயிரம் ஏமாற்றியவரின் நண்பரை கடத்தி சித்ரவதை: 6 பேர் கைது

ராஜமங்கலம் பகுதியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது: பழிக்குப்பழியாக நடந்ததாக வாக்குமூலம்