தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் இலை கட்சி வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பிரஸ்மீட்ல யோவ்… பேசாம…. இருய்யா…ன்னு தொண்டரை காய்ச்சி எடுத்திட்டாராமே மலை’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பா.ஜ வேட்பாளர் அண்ணாமலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, கோவையில் என்ஐஏ அலுவலகம் அமைக்கப்படும், போதை பொருள் தடுப்பு அலுவலகம் அமைக்கப்படும் என பேசிக்கொண்டே இருந்தார். கேள்வி நேரம் வந்தபோது, ஒரு நிருபர், போதை பொருட்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து, குஜராத்தில் உள்ள துறைமுகம் வழியாகத்தானே வருதாம்… இதைத்தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே…? என்று கேள்வி கேட்டார். ஆனால், இந்த கேள்வி தனக்கு புரியாததுபோல் நடித்த அண்ணாமலை, அப்படியே திசை திருப்பி, அதிமுக… அதிமுக… என வேறு சப்ஜெட் பக்கம் திரும்பினார். உடனே அருகில் இருந்த ஒரு பா.ஜ நிர்வாகி, அண்ணே… போதை பொருள் பற்றி கேள்வி கேட்குறாங்க… என எடுத்துக்கொடுத்தார். உடனே, அண்ணாமலை, அவரைப்பார்த்து முர்….ரென ஒரு முறை முறைத்தார். அவ்ளோதான் அந்த நபர் பெட்டி பாம்பாக அடங்கி விட்டார். பிரஸ்மீட் முடிந்து எல்லோரும் கலைந்து சென்றபிறகு, அந்த நபரை அண்ணாமலை அருகில் அழைத்து, “யோவ்…, நான் நடிக்கிறேன்…ல்லா… அதை மாதிரி நீயும் நடிக்க வேண்டியதுதானே….ய்யா…, அப்படி நடிக்க தெரியலைன்னா… வாயை பொத்திகிட்டு… கம்மு….ன்னு… இருக்க வேண்டியதுதானே…? இல்லைன்னா… என்னோட பிரஸ்மீட் நடக்கும்போது… பக்கத்துல வரக்கூடாது… ஓ.கே…. என லெப்ட்… ரைட் வாங்கி விட்டார். அந்த நபர், வாயை பொத்திக்கொண்டு, அங்கிருந்து நடையை கட்டினார்’’ என்று விவரித்தார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி வேட்பாளரை மக்கள் கண்டுகொள்ளவே இல்லையாமே’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் நாடாளுமன்ற தொகுதியில இலைக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை வெயிலூரின் சிறுபான்மை மக்கள் வாழும் சைதான பேட்டை, சாரான மேடு, இரண்டெழுத்து இனிஷியலுடன் கொண்ட பாளையம், கசப்பான பகுதிகளில் மேற்கொண்டாராம். அவர் கூட சிறுபான்மை வாக்காளர்களை கவர, கூட்டணியில் உள்ள சிறுபான்மை அமைப்பின் தலைவரான மைசூர் அரசர் பெயரை கொண்டவரும் சென்று வாக்கு கேட்டாராம். ஆனால், அவர்கள் சென்ற பகுதிகளில் அவர்களை யாருமே கண்டுக்கலையாம். கொடுத்த நோட்டீச மட்டும் வாங்கிக்கிட்டாங்களாம். இத பார்த்து உடன் சென்ற தேர்தல் பொறுப்பாளரான மாஜி அமைச்சர் தம்பியானவர் அப்செட்டானதுதான் மிச்சமாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சி வேட்பாளர் கடைசிநாள் பிரசாரத்துக்கு போகாத காரணம் என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மக்களவை தேர்தல்களம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. தொகுதியில் இலை கட்சியின் வேட்பாளர் கடைசி நாள் பிரசாரத்திற்கு செல்லவில்லையாம். உடல் நல குறைவு ஏற்பட்டதால் வீட்டிலேயே ஓய்வு எடுத்துவிட்டாராம். பிரசாரத்தை முடிக்கும் நேரத்தில் வந்து தலைகாட்டினாராம். மாவட்டத்தில் கொளுத்திய வெயிலும், காலை முதல் மாலை வரை தொடர்ந்து வாகனங்களில் நின்றவாறே பிரசாரத்தில் ஈடுபட்டதும் உடல் நலக்குறைவுக்கு காரணம் என்கின்றனர். எப்படியோ ஒரு வழியாக பிரசாரத்தை முடித்தாகிவிட்டது, இனி தேர்தல் முடிவை பார்த்தால் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் அதிருப்தியில் புல்லட்சாமி எம்எல்ஏக்கள் இருக்கிறாங்களாமே?’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுவையில் புல்லட்சாமி தலைமையில் கூட்டணி ஆட்சி தொடருது. ராஜ்யசபா சீட்டையும் கொடுத்து தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தொகுதியையும் விட்டு கொடுத்தது ஏன்? என்றால் ஒரு எம்பி வைத்து கொண்டு என்.ஆர்.காங்கிரஸ் என்ன சாதித்து விட முடியும். மேலும் 50 ‘சி’ க்கு மேல் செலவு ஆகும். அதனால் பாஜவுக்கு தொகுதியை விட்டு கொடுத்தது. தொடர்ந்து புல்லட்சாமி பாஜ வேட்பாளராக போட்டியிடும் தனது மருமகனுக்காக வேட்புமனு தாக்கல் செய்த மறுநாளில் இருந்து புதுவையில் உள்ள 30 தொகுதியையும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சுழன்று சுழன்று பிரசாரம் செய்தார். கடைசியில் புல்லட்சாமியின் அடிமடியில் பாஜ கை வைத்தது தான் புல்லட்சாமிக்கு ஷாக் அடித்ததாம். தற்போது புதுவையில் எம்எல்ஏவாக உள்ள 10 என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் செலவுகளை, புல்லட்சாமி கட்சியே பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும் என பாஜ கூறியதாம். இதனால் நொந்துபோன புல்லட்சாமி, அதற்கு எங்கள் கட்சியே நின்று இருக்குமே என தனது சகாக்களிடம் கூறி வருகிறாராம். இந்த தகவல் அறிந்த அவரது கட்சி எம்எல்ஏக்கள், பாஜ மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாங்களாம். இதுகுறித்து பாஜ கூறும் காரணம் வேறு வகையாக இருக்கிறதாம். தேர்தலில் நிற்பது அவரது மருமகன்தான். எப்படி பார்த்தாலும் ஒன்றுக்குள் ஒன்று தவுட்டுக்குள் அரிசி என பாஜ நிர்வாகிகள் கலாய்க்கிறார்களாம் ’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ எந்த ரியாக்‌ஷனும் இல்லாததால் தலைமை மீது இலை கட்சி வேட்பாளர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராமே’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ சின்ன வெங்காயம் அதிக விளையக்கூடிய தொகுதியில் இலை கட்சி வேட்பாளராக மோகன் என கடைசி எழுத்தில் முடியக்கூடியவர் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே நிர்வாகிகள் பலரும் அவரை கண்டு கொள்வது இல்லையாம்… இதற்கான காரணம் இவரை வேட்பாளராக அறிவித்தது சொந்த கட்சியினருக்கே பிடிக்கலை. இதனால் பிரசாரத்திற்கு சென்றபோது கூட முக்கிய நிர்வாகிகள் வேட்பாளருடன் செல்லவில்லை. இதனால் மன உளைச்சலில் தொகுதியில் சில பகுதிகளில் தான் பிரசாரத்தில் ஈடுபட்டாராம்… இதுதொடர்பாக கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளார். இந்த தகவல் தலைமையிடத்துக்கும் மூத்த நிர்வாகிகள் கொண்டு சென்றனர். ஆனால் தலைமையிடத்தில் இருந்து பெரியதாக எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம்… இதனால் தலைமை மீது கடும் அதிருப்தியில் வேட்பாளர் உள்ளார். இறுதி கட்ட பிரசாரத்தில் கூட தொகுதியில் எங்கேயும் வேட்பாளரை பார்க்க முடியாததால் பிரசாரத்திற்கு சென்றாரா இல்லையா என கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் நக்கல் அடிச்சு பேசிக்கிட்டாங்க. சொந்த கட்சிக்குள்ளேயும் நம்மளை மதிக்கல… கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் கூட நக்கல் அடித்து பேசி இருக்காங்க என நெருங்கிய ஆதரவாளர்களிடம் வேட்பாளர் புலம்பி தள்ளினாராம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Related posts

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை குற்றவாளிகள் கேரளா ஓட்டமா?