குக்கரால எல்லாமும் போச்சே என கலங்கும் தேனிக்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வில்லன் நடிகரை களத்துல பின்னாடி இருந்து யாரோ இயக்குறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் நாடாளுமன்ற தொகுதியில ஆளும் கட்சியிலயும், மலர் கட்சியிலயும் வேட்பாளரை முடிவு செஞ்சி தேர்தல் வேலைகள் தீவிரமாக போய்க்கிட்டிருக்குது. ஆனா, இலை கட்சியில இன்னமும் வேட்பாளர் யாருன்னே தெரியலை. இந்த நிலையில்தான் திடுதிப்பென்று வெயிலூர் தொகுதிக்கு வில்லன் நடிகர் ஒருவர் வந்திறங்கினார். அவரு, வெயிலூரை சோலை ஊராக மாற்றுவேன், அதுக்குத்தான் வெயிலூர்ல போட்டியிடுறேன்னு சுத்தி சுத்தி வர்றாரு. போற இடத்துலயெல்லாம் வில்லன் நடிகர், காமெடி செஞ்சி ஜனங்களை சிரிக்க வைக்கிறாரு. இதனால் வெயிலுக்கு கொஞ்சம், மக்கள் மகிழ்ச்சியாக இருக்குறாங்க.
அதேசமயம் இத்தனை வருஷமா இல்லாம, இப்ப ஏன் இந்த வில்லன் நடிகர் வெயிலூருக்கு வந்து போட்டி போடுறாருன்னு எல்லா கட்சிக்காரங்களும் யோசிக்குறாங்களாம். அதுல விஷயமறிஞ்ச கட்சிக்காரங்க, இவர் மூலமா ஓட்டை பிரிக்குறதுக்காக இவரை களத்துல பின்னாடி இருந்து யாரோ இயக்குறாங்கன்னு பேசிக்கிறாங்க. பெரிய அளவில பாதிப்பில்லைன்னாலும் எலக்‌ஷன் முடிஞ்சா பின்னணி தெரிஞ்சுடும்னு சொல்லுறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆதரவா வர்றதா பேசிட்டு கடைசில குக்கர்காரரே கவுத்துட்டாரேன்னு கலங்குறாராமே தேனிக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனிபீ எம்பி தொகுதியில் கடந்த முறை நடந்த தேர்தலில் போட்டியிட்டு தேனிக்காரரின் மகன் தில்லாலங்கடியாக போராடி வெற்றி பெற்றார். இலைக்கட்சியில இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த தேனிக்காரர், வேறு வழியில்லாமல் தாமரையோட தயவுல மீண்டும் ஹனிபீ தொகுதியில் போட்டியிடலாம்னு தவமிருந்தார். ஆனால், நான் பிறந்தது நெற்களஞ்சியம் மாவட்டம்னாலும், அரசியல்ரீதியாக களமிறங்கினது ஹனிபீ மாவட்டத்துலதான். இதனால் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு இழந்த இடத்தை பிடிக்கணும்னு குக்கர் தலைவரே, தாமரை தலைவர்கள் வசம் பேசி ஹனீபி தொகுதியை பேசி முடித்து விட்டாராம். தான் அல்லது மகனை களமிறக்கலாம் என்ற கனவில் இருந்த தேனிக்காரர், இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். குக்கரோட வரவாலதான் தன் மகனுக்கு சீட்டு இழுபறியா இருக்குது என்கிற ஆதங்கத்தில் இருந்து வருகிறார். இலைக்கட்சில தான்தான் ஒருங்கிணைப்பாளர், கட்சியை மீட்க போகிறேன் என்று இன்று வரை சொல்லிக் கொண்டு இருக்கிறவருக்கு, அவரோட சொந்த மாவட்டத்திலேயே சிக்கல் உருவாகி இருப்பதால ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் வேறு தொகுதியில் போட்டியிட்டால் உள்ளதும் போயிரும்… தொகுதி விஷயத்துல தாமரைக்காரங்க தன்னை அவமானப்படுத்திட்டதாக ஆதரவாளர்களிடம் கூறி புலம்பி வருகிறார். ஆதரவா வர்றதா பேசிட்டு, கடைசியிலே மீண்டும் தன்னை குக்கர்காரர் கவுத்துட்டாரே? தேர்தலில் பார்த்துக்கலாம்னு நெருங்கியவர்களிடம் கூறி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கோஷ்டி பூசலால்தான் கடலூர் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கிட்டாராமே இபிஎஸ்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலூர் தொகுதியில் அதிமுகவுக்கு மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். மாஜி அமைச்சர், சிட்டிங் எம்எல்ஏ தேவன் ஆகியோர் உள்ளனர். மாஜி அமைச்சருக்கு எதிராக மற்ற இரண்டு மாவட்ட செயலாளரும் உள்ளனர். சிட்டிங் எம்எல்ஏ தலைமையில் சிதம்பரம் எம்எல்ஏ, சொரத்தூரார் ஆகியோர் செயல்படுகின்றனர். கடலூர் தொகுதியில் தனது ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்த, சிட்டிங் எம்எல்ஏவுக்கும் மாஜி அமைச்சருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. மாஜி அமைச்சர், தனது ஆதரவாளருக்கு சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்து இருந்தார். இதுபோன்று சிட்டிங் எம்எல்ஏ தரப்பிலும் மனு கொடுத்து இருந்தனர். கடலூர் தொகுதியில் அதிமுகவில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் இருந்து வருவதாக தொண்டர்கள், தலைமைக்கு பல புகார் மனுக்களை அனுப்பி இருந்தனர். இதுபோன்று இருந்தால் கட்சி கரைந்து விடும் என எச்சரிக்கையும் செய்து இருந்தனர். கோஷ்டி பூசலால் மனம்நொந்து போன இபிஎஸ், கடலூர் தொகுதியை தனது கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கிவிட்டு பிரச்னையை சமாளித்துவிட்டார். கோஷ்டி பூசலால் தான் கடலூர் தொகுதி, கூட்டணி கட்சிக்கு சென்றதாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலையுடன் பேசிக் கொள்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேனியின் ஒப்பற்ற தியாகம் அவங்களுக்கு தெரியலைன்னு புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி டிஸ்டிரிக்டில் நடந்த தாமரை கூட்டணி எலக்‌ஷன் பிரசாரத்தில் தேனிக்காரரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று புலம்ப ஆரம்பித்துள்ளனர் அவரது அடிப்பொடிகள். தாமரை கூட்டணியை பொறுத்தவரை கடைசிநேரம் வரைக்கும் பேரம் பேசி முடிச்சு தான், மாம்பழ கட்சி ஆதரவு நிலைப்பாட்ைட அறிவிச்சாங்க. ஆனா சேலத்துக்காரருடன் சேர்ந்திருக்கும் போதே தாமரையை தீவிரமாக ஆதரிச்சவரு எங்க தேனிக்காரரு. இன்னும் சொல்லப்போனால் அவங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடினவரு எங்க ஆளுதான். இதன்காரணமாகவே இப்போது தனி மரமா நிக்குறாரு. சேலத்தில் நடந்த கூட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துதான் அவர் மேடையில் ஏறினார். ஸ்டேஜுக்கு போகும் போதே விவிஐபி செக்கிங் என்ற பெயரில் ஒரு பட்டியலை சரிபார்த்தாங்க. அதில் தேனிக்காரரு பேரு இல்லை. நான்தான் அவரு என்று விளக்கம் கூறி விட்டு ஸ்டேஜுக்கு போகும் அளவுக்கு தர்மசங்கடத்தை கொடுத்தாங்க. அதுக்கப்புறம் பிரதமரு வந்ததும் பேச்ைச நிறுத்தச் சொன்னாங்க. எல்லாத்தையும் சகிச்சுகிட்டு ஸ்டேஜில் புன்னகையோடு இருந்தாரு. கூட்டத்தில் டாக்டரையும், சன்னையும் வானளாவ புகழ்ந்த பிரதமரு, முன்னாள் சி.எம்மான எங்க ஆளு பேரைக்கூட சொல்லல. தேனிக்காரரின் ஒப்பற்ற தியாகம் இப்போது தாமரை பார்ட்டிகளின் கண்ணுக்குத் தெரியல. நிச்சயம் பாருங்க, காலமும் காட்சியும் மாறும். அப்போ எங்க ஆளு யாருன்னு இவங்களுக்கு தெரியும் என்று விம்முகிறார்கள் தேனியின் ஆதரவாளர்கள்..’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.

 

Related posts

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு

முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம்: பணிகள் தீவிரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!