கோழிக்கோடு விமான நிலையத்தில் ஆடைக்குள் மறைத்து ரூ1.17 கோடி தங்கம் கடத்திய இளம்பெண் கைது

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து ஆடைக்குள் மறைத்து ரூ1.17 கோடி தங்கத்தை கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் உள்ள கோழிக்கோடு, கொச்சி, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாகத்தான் பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக சுங்க இலாகா, வருவாய் புலனாய்வுத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு தங்கத்தை கடத்தி வருகின்றனர். விமானநிலைய அதிகாரிகளின் கண்ணில்படாத வகையிலும், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பணம் கொடுத்தும் சிலர் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

இவ்வாறு கடத்துபவர்களில் சிலர் விமான நிலையத்தின் வெளியே வைத்து போலீசிடம் சிக்குவதும் உண்டு. இந்தநிலையில், ஜித்தாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு ஒரு தனியார் விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெண் ஒருவர் தங்கத்தை கடத்திக் கொண்டு வருவதாக கரிப்பூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விமான நிலையத்தின் வழியே மாறுவேடத்தில் கண்காணித்தபோது இந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சூர் குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த ஷப்னா (33) என்ற பெண், வழக்கமான பரிசோதனைக்குப் பின் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். பின்னர் அவர் காரில் ஏறி புறப்பட முயன்றார்.

அவர்தான் தங்கத்தை கடத்திக் கொண்டு செல்கிறார் என்பதை உறுதி செய்த போலீசார், அவரைப் பிடித்து விசாரணைக்காக கொண்டு சென்றனர். பல மணி நேரம் விசாரணை நடத்தியும் அவரிடம் இருந்து தங்கம் எதுவும் சிக்கவில்லை. கடைசியில் அவர் ஏறிய காரை பரிசோதித்தபோது கார் கதவில் ஒரு பேக்கில் 1884 கிராம் தங்கக் கலவை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை கைப்பற்றிய போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரித்தனர். ஜித்தாவில் இருந்து கோழிக்கோடு வந்த அவர், தன்னுடைய ஆடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார்.

விமானநிலையத்தில் நடத்திய சோதனையில் அவரிடம் தங்கம் இருப்பதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. சோதனை முடிந்த பின் வெளியே வந்த அவர் போலீசார் நிற்பதை கவனித்துள்ளார். உடனடியாக ஒரு மறைவான இடத்திற்கு சென்று ஆடையில் இருந்த தங்கத்தை வெளியே எடுத்து தன்னுடைய பேக்கில் மறைத்து வைத்தார். பின்னர் காரில் ஏறியவுடன் பேக்கை கார் கதவுக்குள் மறைத்து வைத்தார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ₹1.17 கோடி என்று தெரிகிறது.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்