தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது… கோவை தொகுதி தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!!

சென்னை: கோவையில் தேர்தல் முடிவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த மனுவில், “மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது. இதேபோல, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.பெயரை நீக்குவதற்கு முன்பு முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த ஜனவரி மாதமே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மனுதாரர் குறிப்பிட்ட தொகுதியில் வசிக்கவில்லை. மாறாக ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதே அவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டது, “இவ்வாறு தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, குறிப்பாக கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று கூறி கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவை நிறுத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு