திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குற்றச்சாட்டு தீவிரவாதி போல் கெஜ்ரிவால் நடத்தப்படுகிறார்: அடுத்த வாரத்திலிருந்து அமைச்சர்களை நேரில் சந்திக்கிறார்

புதுடெல்லி: ‘திகார் சிறையில் தீவிரவாதியைப் போல் கெஜ்ரிவால் நடத்தப்படுகிறது. அடுத்த வாரத்தில் இருந்து அவர் 2 அமைச்சர்களை சந்தித்து, சிறையிலேயே அரசை நடத்தப் போகிறார்’ என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கூறி உள்ளார். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சந்தீப் பதக் ஆகியோர் நேற்று சிறையில் சந்தித்து பேசினர்.

பின்னர் பகவந்த் மான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சிறையில் கெஜ்ரிவாலின் நிலையை பார்த்து நான் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். கொடுங் குற்றங்கள் செய்த குற்றவாளிக்கு கிடைக்கும் வசதிகள் கூட கெஜ்ரிவாலுக்கு தரப்படவில்லை. கண்ணாடி தடுப்பு சுவருக்கு பின்னால் இருந்து தொலைபேசி இன்டர்காம் மூலமாகத்தான் அவரிடம் பேசினோம். அவரது நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் என்ன குற்றம் செய்தார்? பள்ளிகள், மருத்துவமனைகள், மொஹல்லா கிளினிக்களை கட்டினார்.

பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் தந்தார். அப்படியா அவரை நடத்துகிறார்கள்? ஒரு தீவிரவாதியைப் போல் நடத்துகிறார்கள். மோடிக்கு என்னதான் வேண்டும்? வெளிப்படையான அரசியல் செய்தவரை இவ்வாறு நடத்துவதற்கான விலையை நீங்கள் தருவீர்கள். அடுத்த வாரம் முதல் சிறையில் இரண்டிரண்டு அமைச்சர்களாக சந்தித்து, அவர்களின் துறை குறித்து கெஜ்ரிவால் கேட்டறிய உள்ளார்.

சிறையிலிருந்தே அவர் அரசை நடத்துவதற்கான சட்டப்பூர்வ முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும். மக்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி வலுவான அரசியல் கட்சியாக உருவெடுக்கும். சிறையில் கூட மக்களைப் பற்றித்தான் கெஜ்ரிவால் கவலைப்படுகிறார். தேர்தல் மூலம் அரசியல் சாசனம் பிழைத்தால், ஆம் ஆத்மியும் பிழைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* கண்ணீர் சிந்திய பகவந்த்
எம்பி சந்தீப் பதக் கூறுகையில், ‘‘சிறையில் கெஜ்ரிவாலின் நிலையைப் பார்த்து பகவந்த் மான் அழுதே விட்டார். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என நாங்கள் கேட்டதற்கு கெஜ்ரிவால், ‘நான் இந்த சவால்களை சந்திக்க தயாராக இருக்கிறேன். மக்கள் எப்படி இருக்கிறார்கள்? என்ன நினைக்கிறார்கள்? அவர்களுக்கு முறையாக மானியங்கள் சென்றடைகிறதா?’ என மக்களைப் பற்றிதான் கவலைப்படுகிறார். எம்எல்ஏக்கள் சிறப்பாக செயல்படுவதால் மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கூறிய பிறகு தான் நிம்மதி அடைந்தார்’’ என்றார்.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.