கெஜ்ரிவால் மேல்முறையீடு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்த நிலையில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஜாமீன் கோரியும், அதேப்போன்று அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,‘‘இது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறிப்பாக அவர் முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒரு வேலை அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தால் அவர்களது தரப்புக்கு அதிக காலக்கெடு வழங்க கூடாது என்று தெரிவித்தார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கூறினார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,‘‘அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. இதைத்தொடர்ந்து அதற்கு 26ம் தேதிக்குள் மனுதாரர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 23ம் தேதி வரையில் டெல்லி நீதிமன்றம் நேற்று நீடித்தது.

Related posts

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

‘3வது முறையாக ஆட்சி அமைக்கிறார்’: ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்பு.! பிரதமர் மோடி பங்கேற்கிறார்